உலகம்

நைஜீரியாவில் வெடித்துள்ள டிப்தீரியா - ஒரே மாகாணத்தில் 25 பேர் மரணம்

நைஜீரியாவில் வெடித்துள்ள டிப்தீரியா - ஒரே மாகாணத்தில் 25 பேர் மரணம்

Sinekadhara

நைஜீரியாவில் டிப்தீரியா என்று சொல்லக்கூடிய ‘தொண்டை அழற்சி நோய்’ தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த தொற்றால் நாட்டின் வடக்கு மாகாணத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள். இதுவரை எத்தனை பேருக்கு தொற்று பரவியுள்ளது, எவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளிவரவில்லை.

நைஜீரியாவின் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையமானது டிப்தீரியா பரவலை கட்டுப்படுத்த அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அதன் தலைவர் டாக்டர் இஃபடயோ அடேடிஃபா கூறுகையில், நாட்டிலுள்ள 36 மாகாணங்களில் குறிப்பாக 4 மாகாணங்களில்தான் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அங்கு கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கானோ மாகாணத்தின் ஹெல்த் கமிஷன் தலைவர் டாக்டர் அமினு சான்யாவா, ”எங்கள் மாகாணத்தில் 70 பேருக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இந்த பாக்டீரியா தொற்றால் 25 பேர் இறந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். மூச்சுப் பிரச்னை, இதயம் செயலழிப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளை டிப்தீரியா ஏற்படுத்துகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், நெரிசலான இடங்களில் வாழ்பவர்களும், சுகாதாரமற்ற இடங்களில் வாழ்பவர்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் நைஜீரியாவில் இதுபோன்ற டிப்தீரியா தொற்றுப்பரவல் ஏற்பட்டதில்லை. ஊரக பகுதிகளில் நோய்த்தொற்றை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் போதிய வசதிகள் இல்லை என்பதுதான் தற்போதைய பெரும்சோகம்.

நைஜீரியாவில் வழக்கமாக குழந்தைகளுக்கு செலுத்தப்படும் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் குறைந்துவிட்டதாக UNICEF 2020ஆம் ஆண்டே தெரிவித்திருந்தது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு தடுப்பூசி குறைந்துவிட்டது என எச்சரித்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கானோ மாகாண மருத்துவமனையில் டிப்தீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்கிறார் அம்மாகாணத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அப்துல்லாஹி கௌரன் - மாத்தா. ”இதுகுறித்து தகவல் கிடைத்தவுடனே நாங்கள் எங்கள் சுகாதாரக் குழுவை தயார்செய்து, இதுகுறித்த விசாரணையில் இறங்கினோம்” என்கிறார் கௌரன்.