உலகம்

செய்தி நிறுவனங்களின் வருமானத்தை சுரண்டும் ஃபேஸ்புக், கூகுள்

செய்தி நிறுவனங்களின் வருமானத்தை சுரண்டும் ஃபேஸ்புக், கூகுள்

webteam

ஆன்லைன் மூலம் செய்தி நிறுவனங்களுக்கு வரும் வருமானத்தின் பெரும்பகுதி கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சென்றுவிடுகின்றன என்று அமெரிக்காவின் செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களோடு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் செய்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

அமெரிக்காவிலும், கனடாவிலும் உள்ள 2000 செய்தி நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட ‘நியூஸ் மீடியா அலையன்ஸ்’ அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. செய்தியின் சாரம், செய்திக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, செய்தியைக் காட்டும் முறை, செய்தி மூலம் கிடைக்கும் வருமானம் என அனைத்திலும் ஃபேஸ்புக், கூகுள் என்ற இரு நிறுவனங்களிடம் சரணடையச் செய்ய வேண்டியிருப்பதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.

இந்தப் பிரச்னையால் ஆன்லைனில் பொய் செய்திகளும் அதிகரித்துவிட்டன என்றும், பொய் செய்திக்கும் உண்மையான செய்திக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழம்புவதாகவும் அவர்கள் வெளியிட்ட பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தகத்தில் 60 சதவீதத்தை இந்த இரண்டு நிறுவனங்களே சம்பாதித்துள்ளன என்று ஈமார்கெட்டர் என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆன்லைன் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.