உலகம்

நியூசிலாந்து மசூதியில் 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை !

நியூசிலாந்து மசூதியில் 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை !

jagadeesh

நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதியில் கடந்தாண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு 51 பேரை கொன்றவருக்கு பரோலில் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 29 வயதான பிரெண்டன் டாரண்ட் கைது செய்யப்பட்டார்.

டாரண்ட் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த டாரண்ட் பின்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில் டாரண்டுக்கு தண்டனை அறிவிப்பதற்கான வாதம் கிறைஸ்ட்சர்ச் நீதிமன்றத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் டாரண்டுக்கு அதிகபட்ச தண்டனையாக பரோலில் வெளியே வர முடியாத வகையில் வாழ்நாள் சிறை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் டாரண்டுக்கு பரோலில் கூட வெளியே வர முடியாது ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.