இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நீடித்துவரும் நிலையில் சிங்கள புத்தாண்டை போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கு வெளியே கொண்டாடினர்.
இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்யக்கோரி நாடெங்கும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் 6 நாட்களாக கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். அங்கு சிங்களப் புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி அடுப்பு அமைத்து பால் பொங்கல் வைத்து கொண்டாடினர். போராட்டக்காரர்களுக்கு புத்த மத துறவியரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே இலங்கை அரசு கடனை திரும்பத் தர முடியாமல் திவால் நிலையை அடைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக சர்வதேச கடன் தகுதி மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்டு பி தெரிவித்துள்ளது. திவால் நிலையை நோக்கி இலங்கை ஏற்கெனவே நகரத் தொடங்கிவிட்டதாக மற்றொரு மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.