கொரோனா தொற்று எக்ஸ் தளம்
உலகம்

27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?

Prakash J

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. தவிர, பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.

அதன்பிறகே உலகம், கொரோனா எனும் கோரத் தாண்டவத்திலிருந்து மீளத் தொடங்கியது. எனினும், தற்போதும் ஒருசில நாடுகளில் திரிபுகள் பரவுவதாகவும் அதனால் பாதிப்புகள் உருவாவதாகவும் அவ்வப்போது ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

covid 19 virus

கொரோனாவின் புதிய திரிபு!

இந்த நிலையில் எக்ஸ்.இ.சி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனா தொற்று, உலக நாடுகளில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட இந்த தொற்று, அதன் பின்னர் இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து, போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொற்று, உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அறிகுறிகள்:

புதிய வகை கொரோனா, ஒமிக்கிரான் துணை வகைகளின் கலப்பினமாகும். மற்ற வகை கொரோனா பாதிப்பின்போது ஏற்படும் காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவையே இவ்வகை கொரோனோ தாக்கத்தின்போதும் காணப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.