யானைகள்  முகநூல்
உலகம்

யானைகளும் நம்மைபோல பெயர் சொல்லித்தான் தங்களுக்குள் அழைக்கிறதாம்! சமீபத்திய ஆய்வு தெரிவிப்பது என்ன?

யானைகள் தனது சகயானைகளை பெயர்ச்சொல்லி அழைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

டால்ஃபின், கிளி போன்றவை சில உயிரினங்கள், சில நேரம் குறும்புத்தனமாக சக டால்ஃபின் அல்லது கிளி எழுப்பும் ஒலியைக் கேட்டு அதேபோல் ஒலியெழுப்புவதுண்டு. அதிலும்கூட சில கிளிகள் நாம் பேசுவதை தெளிவாக திரும்பவும் நம்மிடையே பேசும். ஆனால், இவையாவும் வெறும் ஒலி மட்டுமே. அதாவது, சுயமாக அவை யோசித்து பேசுவதில்லை. மொழியாக அவற்றுக்கு தெரியாது. வெறுமனே நாம் எழுப்பும் ஒலியை, திரும்பவும் அவை நம்மிடமே எழுப்புகின்றன.

ஆனால் இவை போல இல்லாமல், மனிதர்களை போலவே யானைகள் தங்களின் சக யானைகளை தங்கள் மொழியில் பெயர் சொல்லி அழைக்குமாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமீபத்திய ஆய்வு ஒன்று இதை கண்டறிந்துள்ளது.

கென்யாவில் உள்ள அனைத்துலக ஆய்வாளர் குழு ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், அம்போஸ்லி தேசிய பூங்காவைச் சேர்ந்த இரண்டு யானை மந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தி கார்டியன் பத்திரிகையின்படி, 36 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. யானைகளை பொறுத்தவரை பலவிதமான சப்தங்களை அவை எழுப்பக்கூடும். அதிக ஒலியை எழுப்பும் எக்காளங்கள் முதல் தாழ்வான சத்தம் வரை அவற்றில் பலவகைகள் உள்ளன. ஆனால், அனைத்து சத்தங்களும் மனிதர்களின் செவிகளுக்கு கேட்பதில்லை.

1986-2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், யானைகள் எழுப்பும் சிறிய அளவிலான அழைப்பொலிகளின் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். யானைகள் எழுப்பும் பேரொலியானது பிளிறல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் 468 தனிப்பட்ட அழைப்பொலிகள் அடையாளம் காணப்பட்டன. அதில், 101 யானைகள் அத்தகைய அழைப்பொலிகளை எழுப்பியுள்ளன, 117 யானைகள் அந்த அழைப்பொலிக்கு பதிலளித்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளானது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் இளம் யானைகளை வயதில் முதிர்ந்த யானைகளே பெயர் சொல்லி அழைக்கிறார்களாம். மேலும், இதை பழக இளம் யானைகளுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் “மனிதர்கள் பெயர் வைத்து அழைப்பது போலவே, ஒவ்வொரு யானையும் தனது சக யானைக்கு குறிப்பிட்ட அழைப்பு ஒலியை எழுப்புகின்றன. தங்களுக்கான அழைப்பொலியை தவிர மற்ற யானைகளுக்கான அழைப்பொலியை யானைகள் நிராகரித்து விடுகிறது என்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஒரு அறிக்கை மட்டுமல்ல... பல அறிக்கைகளில் மனிதர்கள், யானைகள் மட்டுமே வெவ்வேறு பெயர்களையும் பயன்படுத்தி அழைப்பதாக குறிப்பிட்டுள்ளது.