சீனா முகநூல்
உலகம்

சீனா: உயரதிகாரிக்கு உணவு வாங்க மறுத்த பெண், வேலையிலிருந்து நீக்கப்பட்ட கொடுமை! காத்திருந்த ட்விஸ்ட்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சீனாவில் புதிதாக பணியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது உயரதிகாரிக்கு காலை உணவை வாங்க வர மறுப்பு தெரிவித்ததால்... அவர் உடனடியாக பணிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்டின்படி, சீனாவின் ஷாங்காயில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளார் லூ என்ற பெண். இவர் பணிக்கு சேர்ந்த தினம் முதல் தினந்தோறும் காலையில் தன் முதலாளிக்கு சூடான அமெரிக்கானோவுடன் (காப்பி), முட்டை மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி செல்ல கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு நாள் இதனை லூ மறுக்கவே உடனடியாக அவர் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சீனாவின் சமூக வலைதளப்பக்கமான Xiaohongshu மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், தனக்கு நேர்ந்தவற்றை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார் லூ.

அதில், “எனது முதலாளி அவருக்கு காலை உணவை வாங்கச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார். முடியாது என்றுகூறி நான் மறுத்ததால், பணி நீக்கம் செய்யப்பட்டேன். ஏதோ ஒருநாள் மட்டும் காலை உணவை வாங்கி வர நிர்பந்திக்கப்படவில்லை. தினந்தோறும் காலை உணவை வாங்கி வர வேண்டும் என்று முதலாளியால் கட்டாயப்படுத்தப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து HR department யிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத எச்ஆர் டிபார்ட்மெண்ட், இழப்பீடு தொகை எதுவும் கொடுக்க முடியாது எனவும், உடனடியாக பணியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டதாக தனது பதிவில் லூ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளப்பக்கத்தில் வைரலான நிலையில் “இதுகுறித்து கம்பெனியிடம் விசாரிக்க வேண்டும்” என நெட்டிசன்கள் கண்டனக்குரலை எழுப்பவே, இந்த சமபவம் பூதாகரமானது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம், உணவை கொண்டுவர கட்டாயப்படுத்திய உயரதிகாரி லியு என்பவரை பணியிடை நீக்கம் செய்து, லூ-வை மீண்டும் பணியில் சேர உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.