இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த 21 வயது அழகி ஹர்னாஸ் சாந்து, பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஏலாத் நகரில் நடைபெற்ற 70-வது மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்த பட்டத்தை வென்றுள்ளார் அவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய நாட்டின் சார்பில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்த 5.9 அடி உயர அழகி வென்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மிஸ் யூனிவர்ஸ் 2021!
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அழகு, அறிவு, உடல்வாகு, சமூகப் பார்வை என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், போட்டிகள் நடத்தப்பட்டன.
பராகுவே, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த அழகிகள், இந்தியாவை சேர்ந்த இளம்நாயகியான ஹர்னாஸ் சாந்துவுக்கு சவாலாக இருந்தனர். முடிவில் ஹர்னாஸ் சாந்து, இந்த பிரபஞ்சத்தின் புதிய அழகியாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த அழகி ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் சாந்துவுக்கு கிரீடத்தை சூட்டினார்.
இதற்கு முன்னதாக மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகிகள்!
கடந்த 1994-இல் இந்தியாவின் சுஷ்மிதா சென், மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். இந்திய நாட்டின் சார்பில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் அழகி என்ற சாதனையை படைத்தார் அவர். அந்த பட்டத்தை வென்ற போது சுஷ்மிதா சென்னுக்கு 19 வயதுதான். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். தமிழில் ரட்சகன் படத்தில் அவர் நடித்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான அவர் இப்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2000-ஆம் வருடத்தில் லாரா தத்தா, இந்தியா சார்பில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். இறுதி சுற்றில் 9.95 ஸ்கோர் எடுத்து அழகி பட்டத்தை வென்றவர் லாரா. தொடர்ந்து நடிகையாகவும் வலம் வந்தார். தமிழில் அரசாட்சி, டேவிட் மாதிரியான படங்களில் நடித்துள்ளார். அவர் அந்த பட்டத்தை வென்ற போது நடப்பு ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்றுள்ள ஹர்னாஸ், பிறந்து இரண்டு மாதமான குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெட்டிசன்களின் ரியாக்ஷன்!
ஹர்னாஸ், மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றது முதலே அவருக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். #HarnaazSandhu, #MissUniverse2021, #CongratulationsIndia மாதிரியானவை ட்ரெண்டாகி உள்ளன. சிலர் #சுஷ்மிதாசென், என்பதையும் ட்ரெண்ட் செய்துள்ளதை பார்க்க முடிகிறது. “பூமியில் உலா வரும் உயிருள்ள பார்பி டால்” என ஒரு பயனர் ஹர்னாஸ் சாந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சில பயனர்கள் தங்களுக்கு 1994-இல் சுஷ்மிதா சென், மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற அந்த தருணத்தை ஞாபகப்படுத்துவதாக தங்களது பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.
வாழ்துகள் ஹர்னாஸ் சாந்து!