உலகம்

நெல்சன் மண்டேலா: கறுப்பின மக்கள் மத்தியில் பிறந்த இன்னொரு காந்தி

நெல்சன் மண்டேலா: கறுப்பின மக்கள் மத்தியில் பிறந்த இன்னொரு காந்தி

webteam

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் வெ‌ன்று மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட‌ தலைவர் நெல்சன் மண்டேலா. எந்த ஒரு விடுதலைப் போராளியும் அனுபவிக்காத நீ‌ண்ட நெடிய சிறைவாசம் அனுபவித்தவர். இவர் முதன்முறையாக அதிபராக பதவியேற்ற தினம் இன்று.

1994-ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி. தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் நடந்த விழாவில் நாட்டின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா. காயங்களை ஆற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் உரக்கச் சொன்னபோது, கூடியிருந்தவர்கள் கண்ணீருடன் அதை ஆமோதித்தார்கள். இனவெறிக்கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கி, ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டவர் மண்டேலா. 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். சிறைவாசம் முடிந்து வெளிவந்த அவர் மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலான ஆட்சியைத் தந்தார். மக்கள் செல்வாக்கு இருக்கும் நேரத்திலேயே ஆட்சியிலும், அரசியலிலும் இருந்தும் விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் நாகரிகத்தைக் கடைப்பிடித்தவர்.

20ம் நூற்றாண்டு கண்ட மாபெரும் போராளியான மண்டேலா, தென் ஆப்பிரிக்காவின் க்யூனு என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். 9 வயதிலேயே தந்தையை இழந்து தவித்த அவர், தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஜோகன்னஸ்பர்க் சென்று சட்டம் பயின்ற மண்டேலா, பின்னர் ஆப்ரிகன் லீகல் பார்ட்னெர்ஷிப் (African Legal Partnership) என்ற அமைப்பை நிறுவினார்.

1942-ல் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலாவுக்கு, 1950-ல் அதன் இளைஞர் அமைப்பின் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. 1952-ல் கட்சியின் துணைத் தலைவரானார். கறுப்பர், இந்தியர் உள்ளிட்டோரின் கட்டற்ற விடுதலைக்காக பிரசாரம் செய்த மண்டேலா, அதே ஆண்டின் இறுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக மண்டேலா அனுபவித்த சிறைவாசம்தான் அவரது எதிர்காலத்தை செதுக்கியது. இனவெறிக்கு எதிராகவும், சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

1950-களில் நிறவெறியின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களை காரணமின்றி கைது செய்து சித்ரவதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது நிறவெறி அரசு. கறுப்பின மக்களை தனியாக குடியமர்த்துவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. 1960-களில் நிறவெறி அரசின் கொடுமை கறுப்பின பெண்களையும் விட்டுவைக்கவில்லை. நிறவெறிக்கு ஆதரவான சட்டங்களை எதிர்க்கும் வகையில் நெல்சன் மண்டேலா அங்கம் வகித்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

அப்படியொரு போராட்டத்துக்கு1960-ம் ஆண்டு மார்ச் 21 தேதி. சார்ப்வெய்ல்லி நகரக் காவல்நிலையம் முன்பு ஏழாயிரத்திற்கும் அதிகமான கறுப்பின மக்கள் கூடியிருந்தனர். கண்ணீர்புகைக் குண்டுகளும், காவல் துறையினரின் மற்ற ஆயுதங்களும் போராட்டக்காரர்கள் முன் எடுபடாமல் போகவே, விமானங்களை தாழ்வாக பறக்கச்செய்து மக்களை கலைக்க முயன்றது அரசு. கறுப்பின மக்கள் அஞ்சவில்லை. காவலர்கள் துப்பாக்கியால் அப்பாவி மக்களைக் குறிவைத்தனர். அப்போதும் போராட்டக்காரர்கள் கலைந்துவிடவில்லை. காவல்துறையினரின் துப்பாக்கிகளில் இருந்து வெளிவந்த குண்டுகள் 69 பேரை ஈவு இரக்கமின்றி கொன்றது. 180க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

அதுவரை அமைதிவழியில் போராடிய நெல்சன் மண்டேலா உள்ளிட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராளிகள் கொதித்தெழுந்தனர். நிறவெறியை ஒழிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வருவதற்குக் காரணமாக அமைந்தது இந்தப் படுகொலைதான். இதனால் மண்டேலாவைத் தேடத் தொடங்கியது தென்னாப்பிரிக்க வெள்ளை இன அரசு.

ஜோகன்னஸ்பர்க்கின் புறநகர் பகுதியான ரிவோனாவில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர்கள் மற்றும் மண்டேலா மீதும் அரசுக்கெதிராக போராட புதிய நபர்களைத் தேர்ந்தெடுத்தது, அவர்களை குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடுத்தியது, வெளிநாடுகளில் இருந்து தேச துரோக வேலைகளுக்கு பணம் திரட்டியது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது, அப்போதைய நிறவெறி அரசு. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட மண்டேலா உட்பட அனைத்து போராளிகளையும் 90 நாட்கள் எந்த வித விசாரணையும் இல்லாமல் தனிமைச் சிறையில் அடைத்தது. 

பின்னர் 1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி குவார்டஸ் டி வெட் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கு விசாரணை சர்வதேச சமூகத்தாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையாலும் கடும் கண்டனத்திற்குள்ளாகியது. இந்த வழக்கு விசாரணையில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் விதமாக நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. சுமார் மூன்று மணி நேரம் அவர் ஆற்றிய உரையில், நான் ஆப்பிரிக்க மக்களுக்காக போராடுவதற்காக என் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறேன். எவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்க்கிறேனோ, அதே அளவு கறுப்பின ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். 

அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து பேதமில்லாமல் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம் என்றார். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நான் உயிர் துறக்கவும் தயார் என்ற மண்டேலாவின் வாக்குமூலம் அவர் தரப்பு வழக்கறிஞர்களையே அதிர வைத்தது. காரணம் அவருக்கு மரண தண்டனை வழங்க அது காரணமாகிவிடக்கூடும் என அவர்கள் அஞ்சினர். ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் மண்டேலா உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதன் காரணமாக 27 வருடங்கள் சிறையில் இருந்தார் மண்டேலா. அதில் 18 வருடங்களை ராபன் தீவில் உள்ள சிறையில் கழித்தார்.

க்ளாஸ் டீ பிரிவில் மண்டேலா 46664 என்ற சிறை எண்ணில் 8 அடிக்கு 7 அடி அறையில் அடைக்கப்பட்டார். அங்கு மாதம் ஒருமுறை மட்டுமே பார்வையாளர்களை காண முடியும், கடிதங்கள் அனுப்ப முடியும். அந்த கடிதங்களும் அதிகாரிகளால் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். சில நேரங்களில் செய்தித்தாள்களை திருடிப் படித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் சிறைக் கைதிகள் நிலையை மாற்றும் வகையில் குழு ஒன்றை அமைத்து கைதிகளிடம் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை கொண்டு வரவும் மண்டேலா முயற்சி மேற்கொண்டார்.

தன்நாட்டில் உள்ள சாதாரண குடிமக்களை எப்படி நடத்துகிறது என்பதைக் கொண்டே அந்நாட்டை மதிப்பிட முடியும் என்பது மண்டேலாவின் கருத்து. அந்த வகையில் ராபன் தீவில் உள்ள சிறையில் தம் இன மக்கள் அனுபவித்த கொடுமைகளை கண்ட மண்டேலா, அதை மாற்றுவதற்கு பாடுபட்டு வெற்றி கண்டதன் மூலம், தென் ஆப்பிரிக்காவின் நிலையையும் உலக அரங்கில் மாற்றிக்காட்டினார். சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தம், தென் ஆப்பிரிக்கா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் போன்றவைகளால் 1990ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 11ஆம் தேதி தம் போராட்டத்தில் வெற்றி பெற்று விடுதலையானார். 1994-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. 

நாடாளுமன்றத்தால் ஒரு மனதாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார் நெல்சன் மண்டேலா. மே 10-ஆம் தேதி நடந்த அவரது பதவியேற்பு விழாவை நூறு கோடி பேர் தொலைக்காட்சிகளில் பார்த்தார்கள். தனது 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட மண்டேலா, 1999-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகினார். தொடர்ந்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்த அவர், 2013-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

வாழ்நாள் முழுவதும் நிறவெறிக்கொள்கையை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலாவின் மானசீகமான குரு, இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள். அவரது பாதையைப் பின்பற்றியே போராட்டங்களை நடத்தினார் மண்டேலா. தனது 27 வருட சிறைவாசத்துக்குப் பிறகு வெற்றியோடு விடுதலையான மண்டேலா, முதலில் பயணம் செய்தது இந்தியாவிற்குத்தான். 1995ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த மண்டேலா காந்தியின் வழியில் தான் நடந்தாலும், அவருக்கு ஈடானவன் தான் இல்லை என்று தெரிவித்தார். இத்தகைய நற்குணங்களைப் பெற்றிருந்த மண்டேலாவிற்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

வகுப்புவாதத்திற்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் 2001ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான இந்திரா காந்தி விருதும் வழங்கப்பட்டது. இந்தியாவை தனது மற்றொரு தாய்நாடாகவே பார்த்த மண்டேலா, அதிபரான போது தனது அமைச்சரவையில் ஆறு இந்திய வம்சாவளியினரை நியமித்தார். தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்து விட்டதால், அவரால் மண வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதுவே பல மணமுறிவுகளுக்கும் காரணமாக இருந்தது. 1944ஆம் ஆண்டு ஏவிலின் டொகொ மேஸ் உடன் ஏற்பட்ட முதல் திருமண பந்தம் 13 ஆண்டுகளுக்கு பிறகு முறிந்து போனது. பல்வேறு காரணங்களுக்காக மனைவியுடன் இருக்க நேரமில்லாமல் போனது, மனைவியின் மதப்பிரிவு நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாகவும் இந்தத் திருமணம் முறிந்தது.

பின்னர் தம்மை போலவே சமூகத்தின்பால் அக்கறை கொண்ட ஜோஹன்னேஸ் பர்க் நகரின் முதல் கறுப்பின சமூக சேவகரான வின்னி, 1958ஆம் ஆண்டு மண்டேலாவின் வாழ்க்கையில் நுழைந்தார். ஒன்றாய் நடப்போம் என உறுதி கூறிய திருமண உறவில் மண்டேலாவின் சிறை வாழ்க்கை இடைமறித்ததால் பல ஆண்டு காலம் பிரிந்தே இருந்தனர். இதனால் ஏற்பட்ட பிளவினால் தமது திருமண வாழ்வு நீடிக்காது என்பதை சிறையிலிருந்த போதே உணர்ந்ததாக மண்டேலா ஒரு நேர்காணலில் தெரிவித்தார். 36 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் காரணங்களினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாத காரணத்தினாலும் வின்னியும், மண்டேலாவும் பிரிந்தனர்.

பின்னர் மொசாம்பிக்யூ நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் சமோரா மெஜல்-ன் மனைவியான க்ரேசாவின் நட்பு அவருக்கு மன ஆறுதலை தந்தது. தமது 80ஆவது வயதில் மண்டேலா செய்துகொண்ட இந்தத் திருமணம் அனைவரது ஆச்சர்யத்தையும் கவனத்தையும் பெற்றது. இருவருமே தனிமையின் வேதனையை அனுபவித்த காரணத்தினால், தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட பந்தம் வாழ்க்கை துணையின் அர்த்தத்தையும், அவசியத்தையும் உணர்த்தியதாக க்ரேசா பெருமிதத்துடன் கூறினார். பின்னர் அவரையும் பிரிய நேரிட்டது.

மருத்துவமனையில் இருந்த காலகட்டத்திலும், இறுதி நாள்களிலும் வின்னியும், க்ரேசாவும் மண்டேலாவுடனே இருந்தனர். இவரது மகள்கள் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு படமான எ லாங் வால்க் டு ஃபீரிடம் (A LONG WALK TO FREEDOM) திரையிடலை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் அவரது மரணம் குறித்த செய்தி வந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், இனவெறியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் தமது வாழ்நாட்களை அர்பணித்த மண்டேலாவுக்கு நிம்மதியான வாழ்க்கை ஒருபோதும் வாய்க்கவில்லை. ஆனால், உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தன்னம்பிக்கையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கு அவரது போராட்டம் நிறைந்த வாழ்க்கையே காரணம்.