உலகம்

நெல்சன் மண்டேலாவின் கைது ஆணை - எவ்வளவு தொகைக்கு ஏலம் விட முடிவு தெரியுமா?

நெல்சன் மண்டேலாவின் கைது ஆணை - எவ்வளவு தொகைக்கு ஏலம் விட முடிவு தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியவரும், அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் கைது ஆணையை (arrest warrant) சுமார் ரூ.1 கோடிக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நீண்டகாலமாக கறுப்பின மக்களுக்கு எதிரான விதிமுறைகள் அரசின் கொள்கைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்த இனவெறிக்கு எதிராக கறுப்பினத்தை சேர்ந்தவரான நெல்சன் மண்டேலா தலைமையில் அந்நாட்டில் 1950-களில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

இதனால், அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் 1962-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, 1994-ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மண்டேலா, தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராக பதவியேற்றார். இவரது ஆட்சிக்காலத்தில் கறுப்பின மக்களை ஒடுக்கும் வகையில் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் நீக்கப்பட்டன. கல்வி முதல் அரசியல் வரை கறுப்பினத்தவர்களும் பங்கேற்க அவர்களுக்கு நெல்சன் மண்டேலா உரிமையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

கறுப்பின மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடிய நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் உலக அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நெல்சன் மண்டேலாவை முதன்முதலாக கைது செய்வதற்காக 1961-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஏலம் விடுவதற்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள லில்லிஸ்லீஃப் அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்ட காலக்கட்ட ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த அருங்காட்சியம், கரோனா ஊரடங்கால் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து, அந்த அருங்காட்சியகத்தை பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் வகையில் அங்குள்ள சில புகழ்பெற்ற பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நெல்சன் மண்டேலாவின் கைது ஆணையின் உரிமத்தை ஏலம் விட அந்த அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 1,30,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி) அதன் ஏல விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த ஏலம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.