model image twitter
உலகம்

2022-ல் 65,960 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை.. இரண்டாவது இடத்தில் இந்தியா!

அமெரிக்காவில் 2022-ஆம் ஆண்டில் 65,960 இந்தியா்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெற்றிருப்பதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

அமெரிக்காவில் 2022-ஆம் ஆண்டில் 65,960 இந்தியா்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெற்றிருப்பதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அமெரிக்க சமூக கணக்கெடுப்பு புள்ளிவிவர அறிக்கையில், ’அமெரிக்காவில், கடந்த 2022-ஆம் ஆண்டில் 4.6 கோடி வெளிநாட்டினா் வசித்துள்ளனா். இது, அமெரிக்க மொத்த மக்கள்தொகையான 33.3 கோடியில் 14 சதவீதமாகும். மொத்த மக்கள்தொகையில் 2.45 கோடி போ் நாட்டின் இயற்கையான குடிமக்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட அமெரிக்க குடிமக்களாக்கல் கொள்கை அறிக்கையின்படி, 2022-ஆம் நிதியாண்டில் 9,69,380 போ் அமெரிக்க குடிமக்களாகியுள்ளனா்.

இதில் மெக்ஸிகோ நாடு முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டைச் சோ்ந்த 1,28,878 போ் 2022-இல் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக இந்தியா்கள் 65,960 பேரும், பிலிப்பைன்ஸைச் சோ்ந்த 53,413 பேரும், கியூபாவைச் சோ்ந்த 46,913 பேரும், டொமினிக்கன் குடியரசைச் சோ்ந்த 34,525 பேரும், வியட்நாமைச் சோ்ந்த 33,246 பேரும், சீனா்கள் 27,038 பேரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனா்.

இதையும் படிக்க: ஆந்திரா| மகளைக் கடத்த மணமகன் வீட்டார் மீது மிளகாய்ப் பொடி வீச்சு.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. #Video

2023-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையிலும் மெக்ஸிகோ முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டைச் சோ்ந்த 1,06,38,429 போ் அமெரிக்காவில் வசிக்கின்றனா். இதற்கு அடுத்தபடியாக 28,31,330 பேருடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 22,25,447 பேருடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது.. இருந்தபோதும், அமெரிக்காவில் தற்போது வாழும் இந்தியா்களில் 42 சதவீதம் போ் அமெரிக்க குடியுரிமை பெறும் தகுதியைப் பெறவில்லை.

2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 2,90,000 இந்தியா்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு முந்தைய நிலையான, அமெரிக்காவில் சட்டபூா்வமாக தங்கும் (கிரீன் காா்டு - எல்பிஆா்) உரிமையைப் பெற்றுள்ளனா்.

கடந்த 2020-ஆம் நிதியாண்டு முதல் குடியுரிமை பெறுவதற்காக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடா்ந்து நிலுவையில் வைக்கப்படுவதாக புகாா்கள் எழுந்த நிலையில், அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியுரிமை சேவைகள் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்மூலம் கடந்த 2022-ஆம் நிதியாண்டின் இறுதியில் குடியுரிமை பெற சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 5,50,000-ஆக இருந்த நிலையில், தற்போது அது 4,08,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை கோரியதில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஜமைக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர். குடியுரிமைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: புதிய மதுபான முறைகேடு| கெஜ்ரிவால், கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு