பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிய விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஆச்சரியமூட்டும் பல வண்ண புகைப்படங்களை எடுத்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் முதல் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், பிரபஞ்ச ரகசியங்கள் அடங்கிய மேலும் 5 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள பிரபஞ்ச ரகசியங்களை அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளது. சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட துல்லியமான படங்கள் ஆச்சரியத்தில் உறையச்செய்பவையாக உள்ளன.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட முதல் புகைப்படம், சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரபஞ்சத்தின் தோற்றமாகும். இந்த புகைப்படத்தை வைத்தே, நமது பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பைடன் வெளியிட்ட முதல் படத்தை தொடர்ந்து மேலும் 5 படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் படத்தில் சில பால்வெளி மண்டலங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படங்கள் மிக துல்லியமாகவும் இதற்கு முன் பார்த்திராததாகவும் உள்ளது. கோள்களுடன் நட்சத்திரங்களும் ஒளிரும் காட்சிகள் இப்படத்தில் உள்ளன. நாசா வெளியிட்டுள்ள 2 ஆவது புகைப்படம் WASP -96 B எனப்படும் வாயு நிறைந்த கோளின் படமாகும்.
பூமியில் இருந்து சுமார் 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கோள் உள்ளது. தொலைநோக்கி மூலம் முதன் முறையாக கண்டறியப்பட்ட புறக்கோளின் புகைப்படம் இதுதான் என்று நாசா விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள 3 ஆவது புகைப்படம் தூசுகள், ரசாயனங்கள் கொண்ட புகை மூட்டத்திற்கு இடையில் விண்மீன் ஒன்று உள்ளதாகும்.
அகச்சிவப்பு கதிர் மூலம் எடுக்கப்பட்ட இப்படம் விண் மீனின் இறப்பை குறிக்கும் வகையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நான்காவதாக எடுக்கப்பட்ட புகைப்படமே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதுவரை எடுத்த படங்களிலேயே மிகப்பெரியதாகும்.
150 மில்லியன் பிக்சல் தெளிவுடன் சுமார் ஆயிரம் தனித்தனிப்படங்களை ஒன்றாக்கி ஒற்றைப்படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கருந்துளை (Blackhole) ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. நாசா வெளியிட்டுள்ள கடைசி படம் விண்மீன்களுள் வண்ணமயமானதாக காணப்படுகிறது. மலைகள், பள்ளத்தாக்குகள் போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆச்சரியங்கள் நிறைந்த இந்த புகைப்படங்கள், பிரபஞ்சம் பற்றிய பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் மனித குலத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலிற்கான முக்கிய படியாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது