உலகம்

ஏலியன்ஸா இல்லை, மனிதர்களா..? - அமெரிக்காவை கலங்கடித்த 'உலோக மர்மம்'!

Sinekadhara

அமெரிக்காவின் பாலைவனத்திற்கு நடுவே திடீரென தோன்றிய உலோகத் தூண் தொடர்பான மர்மம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 18-ம் தேதி அமெரிக்கா யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்திற்கு நடுவே 10-12 அடி உயரத்தில் ஒரு பெரிய உலோகத் தூண் ஒன்று செங்குத்தாக நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்க, இது இணையத்தில் வைரல் ஹிட் அடித்தது. காரணம், அந்தப் பாலைவனப்பகுதி மிகவும் கரடுமுரடான, பாறைகளை அதிகம் கொண்ட பகுதி. இங்கு, வாகனங்களில் வருவது, ஆள் நடமாட்டம் இருப்பது என்பதே முடியாத காரியம். பொதுப்பணித்துறை அதிகாரிகளே ஹெலிகாப்டரில் செல்லும்போதுதான் இந்தத் தூணைக் கண்டுபிடித்தனர்.

இதனை அறிந்த நெட்டிசன்கள் மர்மமான உலோகத்தூணை ட்ரெண்ட் செய்தனர். அதிலும் 'ஏலியன்ஸ் வேலை. ஏலியன்ஸ் வைத்திருப்பார்கள்' என்கிற ரீதியில் மீம்களை தட்டிவிட்டனர். இந்த ஆர்வம் சிலரை அந்தப் பகுதிக்கே செல்லவைத்தது. ட்ரெக்கிங் வீரர் டேவிட் சர்பேர் என்பவர் இரண்டு முறை அந்த இடத்துக்குச் சென்றுள்ளார். முதல் முறை செல்லும்போது அங்கு இருந்த மர்ம உலோகத்தூண், இரண்டாம் முறை செல்லும்போது அங்கு இல்லை. இதை தன் வலைதளப்பக்கத்தில் பகிர, யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை தாங்கள் நீக்கவில்லை என்று அறிவித்தனர்.

இதனால் மர்ம உலோகத்தூண் புரியாத புதிராகவே இணையங்களில் வலம்வந்தது. இதை யார் வைத்தார்கள், யார் எடுத்தார்கள், எதற்காக எடுத்தார்கள் என்பது போன்ற கேள்விகள் வட்டமடித்தன. அதற்குபிறகு தற்போது சுமார் 10 நாள்களுக்கு பிறகு இந்த உலோகத்தூண் குறித்த மர்மம் விலகியுள்ளது.

அமெரிக்கா புகைப்பட கலைஞர் ராஸ் பெர்னார்டு என்பவர் இந்த 'உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்' எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ''மற்றவர்களைப் போல ஆர்வமிகுதியில் நானும் என் நண்பர்களும் உலோகத்தூண் உள்ள இடத்துக்கு 7 மணி அளவில் சென்றோம். நாங்கள் அங்கு செல்லும்போது எங்களுக்கு முன்பே ஒரு சிலர் அங்கு இருந்தனர். சில நொடிகளில் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். இதன்பின் நாங்கள் நிலா வெளிச்சத்தில் அந்த தூணை போட்டோ எடுத்தோம். நாங்கள் அங்கிருந்து கிளம்ப தயாரானபோது எங்களுக்குமுன் வந்துச்சென்ற அந்த நான்கு பேர் மீண்டும் அங்கு வந்தனர்.

வந்ததும் அவர்கள் தூணை சாய்க்கத் தொடங்கினர். சில நொடிகளில் அந்தத் தூணை தாங்கள் கொண்டுவந்த தள்ளுவண்டியில் போட்டுகொண்டு அவர்கள் கிளம்பிவிட்டனர். தூணைத் தோண்டும்போதே 'எந்த தடயத்தையும் விடவேண்டாம்' என்று அவர்களுக்குள் பேசியதை நாங்கள் கவனித்தோம்.

அவர்களை நாங்கள் தடுக்கவில்லை. காரணம், மனித கால்தடம்படாத அந்தப் பாலைவனப்பகுதியில் இந்தத் தூண் வந்தபிறகு மக்கள் மொய்க்க ஆரம்பித்தனர். நாங்கள் சென்றபோதே சுமார் 70 வாகனங்களை அங்கு பார்த்தோம். பாலைவனத்தின் அனைத்து மூலைகளிலும் உலோகத்தூணைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் புகுந்து இருந்தனர். மனிதர்கள் இதுவரை வந்திராத அந்த இடம் பாழாக்கப்பட்டு வந்ததை பார்த்தபிறகு அந்த நால்வரையும் நாங்கள் தடுக்கவில்லை. இயற்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் நல்லது" எனக் கூறி மர்மத்தை ஓரளவுக்கு விலக்கியுள்ளார்.

எனினும் உலோகத்தூணை இதே கும்பல்தான் அங்கு வைத்ததா, எதற்காக வைத்தார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. அமெரிக்க அரசு இது குறித்த விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.