உலகம்

’சோம்பீஸ்’ ஆகும் புறாக்கள் - பிரிட்டனில் பரவும் மர்ம நோயால் அச்சம்

’சோம்பீஸ்’ ஆகும் புறாக்கள் - பிரிட்டனில் பரவும் மர்ம நோயால் அச்சம்

Sinekadhara

பிரிட்டனில் ஒருவித மர்ம நோய்த்தொற்று பரவிவருவதாகவும், அதனால் பறவைகளில் குறைபாடு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோய்த்தொற்றால் பறவைகளின் இயக்கம் குறைந்து அவை சோம்பீக்களைப்போல மாறுவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பிரிட்டனின் ஜெர்ஸி பகுதியிலுள்ள புறாக்களை தாக்கியுள்ள இந்த நோய்த்தொற்றை Pigeon Paramyxovirus அல்லது Newcastle's Disease என்று அழைக்கின்றனர். பாரமைசோவைரஸால் தாக்கப்பட்ட புறாக்களின் இறகுகள் வலிமை இழப்பதுடன், அவற்றின் கழுத்தும் கடுமையாக முறுக்கப்படுகிறது. இதனால் புறாக்கள் பறக்கமுடியாமல் போவதுடன் அவற்றின் மலமும் பச்சை நிறத்தில் வெளியேறுகிறது. இந்த நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருவதால் பிரிட்டன் முழுவதுமுள்ள பறவைகளிடையே எளிதில் பரவும் அபாயம் அதிகரித்திருக்கிறது. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகள் உணவு உண்பதில் தயக்கம் காட்டுகின்றன.

JSPCA விலங்குகள் சரணாலயத்திற்கு வரும் புறாக்களிடையே, குறிப்பாக தரையில் வாழும் புறாக்களிடையே கடந்த சில வாரங்களாக இந்த நோய்த்தொற்று வெகு வேகமாக பரவிவருவதாகவும், இதனால் கழுத்து முறுக்கப்படுதல், தடுமாற்றம் அல்லது நிறக முடியாமை போன்ற நரம்பு சார்ந்த பிரச்னைகளின் அறிகுறிகள் அவைகளுக்கு தென்படுவதாகவும், சரணாலய அதிகாரி தி சன் செய்திக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்த நோய்த்தொற்றானது பறவைகளிடையே மிகவும் அபாயகரமான விளைவுகளை உருவாக்கக்கூடியது. பாரமைசோவைரஸானது தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளின் மலம் மற்றும் எச்சில் போன்ற பிற வெளியேற்றங்கள்மூலம் பிற பறவைகளுக்கு பரவுகிறது. இந்த தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் JSPC விலங்குகள் சரணாலயத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகள் மனிதாபிமானத்தின் அடிப்படையில் கருணைக்கொலை செய்யப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரமான மற்றும் குளிரான மாதங்களில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயால் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது சற்று ஆறுதலான செய்தி. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகளை கையாளும் மனிதர்களுக்கு தொற்றின் தாக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் புறா வளர்ப்பவர்கள் தங்கள் புறாக்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு பிரிட்டன் அரசு தெரிவித்திருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டனின் 155 பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் 3 மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்பட்ட பறவைகள் அங்கிருந்து விரட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.