உலகம்

செயற்கைகோளின் பாகமா? - கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட 41 கிலோ உலோக பந்து!

webteam

கடற்கரையில் தென்பட்ட 41கிலோ உலோக பந்து வைரலாகி வருகிறது. அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

பிரிட்டனைச் சேர்ந்த மனான் கிளார் என்ற பெண்மணி தன்னுடைய குடும்பத்துடன் மேற்கிந்திய தீவில் உள்ள ஹார்பர் தீவுக்கு சென்றுள்ளார். கடற்கரையை ரசித்துக்கொண்டு இருந்த மனான், வித்தியாசமான ஒரு பொருள் கடற்கரையில் இருப்பதை பார்த்துள்ளார். பளபளவென மின்னிய பொருள் பாதி கடற்கரை மணலில் புதைந்தவாறு இருந்துள்ளது. அதன் அருகே சென்று அதனை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. மணலை அகற்றி பார்த்ததில் அது மிகப்பெரிய உலோக பந்து என தெரியவந்துள்ளது.

ரஷ்ய மொழியில் சில எழுத்துகளும் அதன் மீது எழுதப்பட்டுள்ளன. உடனடியாக செல்போனில் படம் பிடித்து மர்ம உலோக பந்து குறித்து மனான் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில் பலரும் அந்த உலோக பந்தை பார்வையிட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள மனான், நாங்கள் வழக்கம்போல் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தோம். அப்போதுதான் உலோக பந்தை பார்த்தோம். மணலை அகற்றி பார்த்தபோது அதில் சில ரஷ்ய எழுத்துகள் இருந்தன. அது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.

உலோக பந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இது ராக்கெட்டில் பயன்படுத்தும் ஒரு உலோக உருளையாக இருக்க வாய்ப்புள்ளது. அல்லது ஏதேனும் செயற்கைக்கோளில் உள்ள பொருளாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலொக உருளை இணையத்தில் வைரலாகியுள்ளது.