தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எனினும், தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் அவரது ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகியையும் ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே, ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அந்நாட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் சிறையில் இருந்து வரும் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து மாற்றப்பட்ட ஆங் சான் சூகி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.