உலகம்

PT Web Explainer: மியான்மரில் ராணுவத்திடம் அதிகாரம் எப்போதும் ஓங்கியிருப்பது ஏன்?

PT Web Explainer: மியான்மரில் ராணுவத்திடம் அதிகாரம் எப்போதும் ஓங்கியிருப்பது ஏன்?

webteam

மியான்மரில் ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியினர் ஆட்சியில் இருந்த நிலையில், ராணுவத்தால் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேறியுள்ளது. இதனை சாத்தியப்படுத்தியுள்ள ராணுவம், ஓராண்டுக்கு அவசர நிலையை அமல்படுத்தியிருக்கிறது. முழு அதிகாரமும் ராணுவத்தின் கையில் சென்றுவிட்ட நிலையில், இணையதள சேவை, அரசு தொலைக்காட்சி சேவை, வங்கி சேவை ஆகியவை முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து தனது ஆதரவாளர்கள் போராட வேண்டும் எனவும் ஆங் சாங் சூச்சி தெரிவித்திருக்கிறார்.

ஆட்சி கவிழ்ப்பு ஏன்?

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 83 சதவீத வாக்குகளை பெற்று மீண்டுமொரு மிகப்பெரிய வெற்றியை ஆளும் தேசிய ஜனநாயக லீக் பதிவு செய்திருந்தது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறி, ஆட்சி கவிழ்ப்பை நியாயப்படுத்தியுள்ளது மியான்மர் ராணுவம். ஓய்வுபெறும் தருவாயை நெருங்கும் ஜெனரல் மின் ஆங் லெய்ங், நியாயமான ஒரு தேர்தலை நடத்தி, அதில் வெற்றி பெறும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த மின் ஆங் லேய்ங்?

மியான்மரில் தற்போது முழு அதிகாரமும் ராணுவத் தலைமை தளபதி மின் ஆங் லேய்ங்-கிடம் ஒப்படைப்பட்டிருக்கிறது. அதிகம் பேசாத சூத்திரதாரி மின் ஆங் லேய்ங், 2011-ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மியான்மர் மாற வழிவகுத்துக் கொடுத்தவர். தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு, ஆங் சான் சூச்சிக்கு இணையாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார்.

2016-ஆம் ஆண்டில் தமக்குத்தாமே பதவி நீட்டிப்பை வழங்கி மாஸ் காட்டியவர் இவர். காரணம், மியான்மர் ராணுவத்தால் விளைந்த நிலம். அங்கு மக்களாட்சி என்பது இடையில் வந்தது. ஆரம்பத்திலிருந்தே ராணுவ ஆட்சியை பார்த்து வளரந்தவர்கள்தான் அம்மக்கள். எனவே, அங்கு மீண்டும் மீண்டும் ராணுவ ஆட்சி அமல்படுத்த என்ன காரணம் என்பதை அறிய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.

வரலாறு சொல்லும் செய்தி இதுதான்...

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து மியான்மருக்கு 1948-ஆம் ஆண்டு விடுதலை கிடைத்தது. 1962-ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டு அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம். கிட்டத்தட்ட பல ஆண்டுகள் ராணுவ ஆட்சியை சகித்துக்கொண்ட வாழ்ந்த மக்கள், மக்களாட்சி கோரி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 1988-ஆம் ஆண்டு மியான்மரில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்கத்தொடங்கின. போராடிய மக்களை வேட்டையாடியது பாதுகாப்பு படை. இதில் பலரும் தங்களது இன்னுயிரை நீத்தனர்.

ரத்தச் சரித்திரங்கள் கொண்ட இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு, ஏறக்குறைய 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆங் சான் சூச்சி. 1962-ஆம் ஆண்டில் இருந்து சுமார் 50 ஆண்டு காலம் மியான்மரை ஆட்சி செய்திருக்கிறது ராணுவம். ஒருவழியாக வீட்டுக்காவலிருந்து 2010-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் ஆங் சான் சூச்சி. இதையடுத்து, 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் வெற்றி பெற்று மக்களாட்சி அமலானது. ஆங் சான் சூச்சியின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றிருந்ததால், அவரால் அதிபராக பதவி ஏற்க முடியவில்லை. அதனால், அவர் மியான்மரின் தலைமை ஆலோசகராக நீடித்தார்.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கவே செய்ததது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபோதுகூட, ஜனநாயகத்தின் கையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை. ஜனநாயகம் கோரி போராடிய ஆங் சான் சூச்சி போன்றவர்கள், ஓரளவு அதிகாரம் கிடைக்கும் என்பதற்காக, எங்கும் கேள்விப்பட்டிராத ஓர் உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டார்கள்.

அதன்படி, நாடாளுமன்றத்தில் 3-இல் ஒரு பங்கு இடங்கள் நிரப்பும் அதிகாரம் ராணுவத்திடமே இருந்தது. பாதுகாப்பு, உள்துறை, எல்லை விவகாரத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சர்களாக ராணுவத்தினரே நியமிக்கப்பட்டனர். சூச்சியின் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ராணுவமே தனது அதிகாரத்தைச் செலுத்திவந்தது. முழுமையான மக்களாட்சி அமல்படுத்துவதற்கு மின் ஆங் லேங் ஒருபோதும் இணங்கி வரவில்லை. மக்களாட்சி என்ற பெயரில் முக்கால் பங்கு அதிகாரம் ராணுவமே தக்கவைத்திருந்தது.

இப்போதும்கூட ராணுவ ஆட்சி அங்கு அரங்கேற முக்கிய காரணம், எங்கே தங்களது பிடி கைவிட்டு சென்றுவிடுமோ என்ற பயத்தில்தான். காரணம், கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சி தோற்றுப் போனது. அதிகாரங்கள் கைவிட்டு போயிவிடக் கூடாது என்பதற்காக இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என கூறி ஆட்சியை கவிழ்த்திருக்கிறது மின் ஆங் லேய்ங் தலைமையிலான ராணுவம்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நடத்தப்பட்ட விதம், ஆங் சான் சூச்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஐ.நா-வும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஆங் சான் சூச்சி, ஆட்சி - அதிகாரம் வசமானதும் வழக்கமான அரசியல்வாதியாகிவிட்டார் என்ற கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அணுகுமுறை எப்படி?

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், சீனாவும் ஐக்கிய நாடுகள் அவையில் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. அதேவேளையில், இந்தியா கவனமாக அடியெடுத்து வைக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலரி கிளின்டன், மியான்மர் தலைவரான ஆங் சான் சூச்சியைச் சந்தித்தார். மக்களாட்சியின் தொடக்கப் புள்ளியாக அது அமைந்தது. சில வாரங்களுக்கு முன்பாக மியான்மருக்கு வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தலைநகர் நேபிதாவில் மியான்மரின் ராணுவத் தளபதி மின் ஆங் லேங்கைச் சந்தித்தார்.

நாடு, ராணுவ ஆட்சிக்குத் திரும்பியது. இவற்றைக் கொண்டே அமெரிக்கா ஜனநாயகத்தையும், சீனா ராணுவ ஆட்சியையும் ஆதரிப்பதாக பொருள் கொள்ள முடிகிறது. இதை உறுதிப்படுத்துவதுபோல, ஐ.நா பாதுகாப்பு அவையில் ராணுவ ஆட்சிக்கு எதிரான தீர்மானத்தை தடுத்திருக்கிறது சீனா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் ரத்து அதிகாரத்தை இதற்குப் பயன்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பலமுறை சர்வதேச விசாரணைகளில் இருந்து மியான்மரை சீனா காப்பாற்றிய வரலாறு உண்டு. அதன் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்கலாம். மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை, உள்நாட்டு விவகாரம் என்றும், அமைச்சரவை மாற்றம் என்றும் சீனாவின் அதிகாரபூர்வ ஊடகங்கள் கூறுகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதற்காகவே மியான்மர் ராணுவத்தை சீனா ஆதரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மியான்மர் ஒத்துழைப்புடன் நடக்கும் பொருளாதாரப் பாதை உள்ளிட்ட முதலீடுகளைப் பாதுகாப்பதும் சீனாவின் நோக்கமாக இருக்கும்.

இந்தியா எப்போதும் மக்களாட்சிக்கு ஆதரவான நாடு. சீனாவைப் போல ராணுவ ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட முடியாது. அதேநேரத்தில் ராணுவ ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து எல்லையோரத்தில் பகையை வளர்க்கவும் கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதக் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு மியான்மரின் ராணுவத்தின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டே இந்தியா கவனமாக கையாளுவதாக தெரிகிறது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே மியான்மரை நோக்கிய இந்திய நகர்வு அமையப் போகிறது.