ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் நாடு முழுவதும் நேற்று நடந்த போராட்டங்களில் 114 பொதுமக்கள் கொல்லப்பட்டது உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நாடு முழுவதும் 44 நகரங்கள் மற்றும் டவுன்களில் நடந்த போராட்டங்களில் ராணுவத்தால் குறைந்தது 114 பேர் கொல்லப்பட்டனர்.
மீக்திலாவின் குடியிருப்பு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 வயது சிறுவன் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை உருவாக்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக, ஆர்ப்பாட்டக்காரர்கள் யாங்கோன், மாண்டலே மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் போராடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 1 ம் தேதி, மியான்மரின் இராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிந்து, ஒரு வருட கால அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தது. அதே போல நாட்டின் ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சிறைப்படுத்தி வைத்தது. இந்த ஆட்சி கவிழ்ப்பு காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் மியான்மரில் உள்ள ஐ.நா அலுவலகம் ஆகியவை இந்த வன்முறைக்கு எதிராகப் குரல்கொடுத்து வருகின்றன. "கடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து இன்று மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது, தொடர்ச்சியான இராணுவ ஒடுக்குமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த நெருக்கடிக்கு அவசர தீர்வைக் காண்பது மிகவும் முக்கியமானது" என்று ஐ.நா பொதுச்செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.