பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப் தான் ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் மிகப் பெரிய ஆதரவாளர் என பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அண்மையில் வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் குற்றவாளி ஹஃபீஸ் சையத்தை சந்தித்து இருப்பதாகவும், அவரை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் இருக்கும் இந்திய ராணுவத்தை நசுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் லஷ்கர் இ தொய்பாவை ஆதரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவுடன் இணைந்து அந்த அமைப்பை இந்தியா பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திவிட்டது என்றும் விமர்சித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் லஷ்கர் இ தொய்பா பின்னணியில் இருந்து செயல்படுவதையும் முஷாரஃப் இந்த பேட்டியின்போது ஒப்புக் கொண்டார்.