வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
வங்கதேச கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கினர். ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் அந்நாட்டின் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்ததாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது, முகமது யூனஸ், ”நாம் அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள். நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது. அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும். அமைப்புரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். அவை சரி செய்யப்பட வேண்டும்.” என்று அவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.