pm modi, yunus pt web
உலகம்

’இந்துக்கள் பாதுகாப்பு ..’ பிரதமர் மோடிக்கே வந்த போன் கால்! நடப்பது இதுதான் என புட்டு வைத்த யூனுஸ்!

Angeshwar G

தொடர்ச்சியாக வரும் செய்திகள்

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் பல வாரங்களாக நீடித்தது. ஒருகட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதில் நாடுமுழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இடஒதுக்கீட்டை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை நடத்தின. போராட்டம் நடத்தியவர்கள் பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். முன்னதாகவே, நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

முகம்மது யூனுஸ்

தொடர்ந்து, நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைந்தது. தலைமை ஆலோசகராக அவர் செயல்பட ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக 16 பேர் பதவியேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற இடைக்கால அரசின் முக்கியப் பணி என்பது, நாட்டில் அமைதியை மீட்டெடுப்பதும், புதிய தேர்தலை நடத்துவதும்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இடைக்கால அரசு பொறுப்பேற்றும் சிறும்பான்மையினர் மற்றும் அவாமி லீக் கட்சியினரின் குடியிருப்புகள் மீதும், இந்துக்களின் கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. மாணவர்களும் பொதுமக்களும் வன்முறையைக் கைவிட வேண்டும் என முகம்மது யூனுஸ் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார். அனைத்து சிறும்பான்மை சமூக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்.

கோவிலைக் காக்கும் இஸ்லாமிய இளைஞர்கள்

அதேசமயத்தில், சிறும்பான்மை மக்களின் கோவில்கள் தாக்கப்படுவதாக போலிச் செய்திகளும் வருகின்றன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோயில் ஒன்று எரிக்கப்படுவதாக செய்திகள் வந்த நிலையில், உண்மையில் எரிக்கப்பட்டது கோவிலுக்கு அருகில் இருந்த அவாமிலீக் கட்சி அலுவலகம் என்பது பின்னர் தெரியவந்தது. இந்துக்கள் கொல்லப்படுவதாக வரும் செய்திகளும் இதில் அடக்கம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

காளி கோயிலை காக்கும் இளைஞர்கள்

500 ஆண்டுகளுக்கும் பழமையான காளி கோவிலை இஸ்லாமிய மாணவர்கள் சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமை ஆலோசகரான முகம்மது யூனுஸ் கூட ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாகேஸ்வரி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இந்து மதத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினார்.

பாதுகாப்பை உறுதி செய்த யூனுஸ்

இதுஒருபுறம் இருந்தாலும், இந்திய வங்கதேச எல்லைப்பகுதியில் வங்கதேச இந்துக்கள் குவிந்த நிலையில், கடந்த சில நாட்களாக அது குறைந்து வருகிறது. நாம் வங்கதேசத்தில் இருக்கும் சிறும்பான்மை மக்களுடன் நாம் நிற்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், வங்கதேசம் இந்துக்கள் தாக்கப்படுவதாக, இந்திய மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் சார்ந்து விரிக்கப்படும் வலையிலும் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

வங்கதேசத்தில் இருக்கும் சிறும்பான்மை மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “வங்கதேசம், நாட்டில் உள்ள சிறும்பான்மையினர் மற்றும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக உறுதியளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகம்மது யூனுஸ் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்றும் அங்கு நிலவும் சூழ்நிலைகளை குறித்து கருத்துகளைப் பறிமாறிக்கொண்டோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதியான மற்றும் நிலையான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை, முகம்மது யூனுஸ் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்துக்கள் மற்றும் சிறும்பான்மையினரின் பாதுகாப்பிற்கு உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.