ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இத்தாலியில் ஜூன் 14ம் தேதி ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளே மாநாட்டில் கலந்து கொள்கின்றன.
இதனையடுத்து, இத்தாலி பிரதமர் இந்திய பிரதமரை சிறப்பு விருந்தினராக வர அழைப்பு விடுத்தார். அதன்பேரில் இந்திய பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றவுடன் முதல் பயணமாக இத்தாலி சென்றார். இந்த சூழ்நிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 12-ம் தேதி இத்தாலி பாராளுமன்றத்தின் கீழ் சபையில், இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுய ஆட்சி அளிக்கும் சட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் வலதுசாரி கூட்டமைப்பு கொண்டுவந்த இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சியான 5 ஸ்டார் இயக்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
எதிர்ப்பை உறுதிபடுத்தும் வகையில் 5 ஸ்டார் இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் லியோனார்டோ டோனோ, பிராந்திய விவகாரங்களின் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி நின்றிருந்த இடத்துக்கு நடந்து சென்று அவர் மீது இத்தாலியக் கொடியை போர்த்த முயன்றார். இதனைக் கண்ட ஆளும் வலதுசாரி கூட்டணியின் லீக் மற்றும் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சிப் பிரதிநிதிகள் டோனோவிடம் விரைந்து அவரைத் தடுக்க முயன்றனர்.
அப்போது இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து டோனோவை ஆளும் கட்சியினர் சரமாரியாகத் தாக்கினர். இதனால் படுகாயமடைந்த டோனோவை காவல் துறையினர் போராடி மீட்டனர். காயமடைந்த டோனோ அவையில் இருந்து வீல் சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து டோனோ, “என்னை அவர்கள் பல முறை உதைத்தனர். எனது மார்பில் உதை விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது” எனக் கூறியுள்ளார் . நாடாளுமன்ற வாளாகத்தில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து அச்சட்டமும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த கைகலப்பு தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.