உஸ்பெகிஸ்தானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கரடிகள் உலவும் பகுதியில் தனது 3 வயது குழந்தையை தூக்கியெறிந்த தாயை போலீஸார் கைது செய்தனர்.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் தேசிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மிருகங்கள், பறவைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த மிருகக்காட்சி சாலைக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள கரடிகள் உலவும் பகுதிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தனது மூன்று வயது குழந்தையுடன் வந்திருந்தார்.
அனைவரும் கரடிகளை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பாதுகாப்பு வேலியை அந்தப் பெண் தாண்டி சென்றார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் வேலியை தாண்டிய அப்பெண், தனது பெண் குழந்தையை கரடிகள் நடமாடும் பகுதியில் தூக்கி வீசினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர்.
அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த கரடி ஒன்று அந்தக் குழந்தையின் அருகில் வந்தது. பின்னர், சிறிது நேரம் அந்தக் குழந்தையை மோப்பம் பிடித்த அந்தக் கரடி அங்கிருந்து நகர்ந்தது. இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள், உடனடியாக அங்கு சென்று அந்தப் பகுதியில் இருந்த கரடிகளை கூண்டுகளுக்குள் விரட்டி விட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்தக் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. தூக்கி வீசப்பட்டதால் தலையில் லேசாக அடிப்பட்டிருப்பதாகவும், ஓரிரு நாட்களில் குழந்தை முழுமையாக குணமாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குழந்தையை கரடியிடம் வீசிய தாயை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.