கடனாவில் இந்தியர்கள் கூகுள்
உலகம்

ஜஷ்வந்த் சிங் கில் கொலை வழக்கு | முக்கிய காலிஸ்தான் ஆதரவாளர் கனடாவில் கைது - யார் இந்த அர்ஸ் டல்லா?

ஜஷ்வந்த் சிங் கில் கொலை வழக்கில் காலிஸ்தான் ஆதரவாளரான அர்ஷ்தீப் சிங் கில் என்கின்ற 'அர்ஷ்' டல்லா கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jayashree A

இந்தியா-கனடா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜஷ்வந்த் சிங் கில் கொலை வழக்கில் காலிஸ்தான் ஆதரவாளரான அர்ஷ்தீப் சிங் கில் என்கின்ற 'அர்ஷ்' டல்லா கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாட்டில் காலிஸ்தான் ஆதரவுத் தளம் இருப்பதைப் பற்றி அதிர்ச்சியூட்டும் வகையில் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, பிராம்ப்டனில் உள்ள கோவிலுக்கு சென்ற இந்து பக்தர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்த வீடியோவை டொராண்டோவை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடர்கள் பலரும் தங்களின் வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அர்ஷ்தீப் டல்லா

காலிஸ்தான் ஆதரவாளர்களின் இத்தகைய செயலைக்கண்டித்த அந்நாட்டு காவல்துறை, ”வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரிந்துக்கொண்டு அவர்களை கைது செய்வோம். வன்முறையை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறிய நிலையில், கலவரக்காரர்கள் மூவரை போலிசார் கைது செய்ததாக தகவல் வெளியானது

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இச்சம்பவம் குறித்து பேசுகையில், “இச்சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்திருந்தார்

இதை அடுத்து அர்ஷ்தீப் சிங் கில் என்கிற அர்ஷ் டல்லா, சமீபத்தில் கனட பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது

அர்ஷ் டல்லா யார்?

அர்ஷ் டல்லா , தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையுடன் (KTF) தொடர்புடையவர்.

இவர் பஞ்சாபின் லூதியானாவில் பிறந்தார், ஆனால் சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் வசித்து வருகிறார். 2020லிருந்து காலிஸ்தான் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது பஞ்சாபில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கொலை வழக்கு, மிரட்டி பணம் பறித்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பயங்கரவாத தொகுதிகளை உயர்த்துதல், இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை எல்லை தாண்டிய கடத்தல் போன்ற வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவருக்கு கனடாவைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் கோல்டி ப்ரார் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஆகியவற்றுடன் டல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு டெல்லி போலீசார் தெரிவித்தனர் .

மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில் பஞ்சாபின் மோகாவில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர் பல்ஜிந்தர் சிங் பாலியின் கொலைக்கு டல்லா பொறுப்பேற்றார் என்று பிரபல பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. இதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது