உலகம்

கோடிக்கணக்கில் குவிந்த பயனர்கள்.. 2021ஐ மகிழ்ச்சியுடன் தொடங்கிய மார்க் ஸூக்கர்பெர்க்!

EllusamyKarthik

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றினால் உலக மக்கள் சொல்லமாளாத துயரத்திற்கு ஆளாகி இருந்தாலும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என கடல் கடந்து இருப்பவர்களையும் தொடர்பில் இருக்க உதவியது டிஜிட்டல் தொழில்நுட்பம் தான். அந்த வகையில் கடந்த ஆண்டின் கடைசி நாளன்று மட்டும் வாட்ஸ் அப்பில் சுமார் 140 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் பதிவாகியுள்ளன. 

கடந்த 2019 உடன் ஒப்பிடும் போது அந்த ஆண்டில் பதிவாகியிருந்த வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை காட்டிலும் இம்முறை 50 சதவிகிதம் கூடுதலாக பதிவாகியுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் வாட்ஸ் அப்பின் தாய் வீடான ஃபேஸ்புக்கில் சுமார் 55 மில்லியன் லைவ் பிராட்கேஸ்ட் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன. 

கடந்த 2020 மார்ச் வாக்கில் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா பொதுமுடக்கமே இதற்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது. “எந்தவித சிக்கலும் நிகழாமல் இருக்கவும். அப்படி நிகழ்ந்தால் அதை களையவும் பொறியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என புத்தாண்டு மாலை அன்று வலைப்பூவில் தெரிவித்திருந்தார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் டெக்னிக்கல் புரோகிராம் மேலாளர் கைட்லின் பென்போர்ட். 

புத்தாண்டு மாலை அன்று வாட்ஸ் - அப் மற்றும் ஃபேஸ்புக் பயன்பாடு அதிகரித்து இருப்பதை அந்த நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் 2021 ஆம் ஆண்டை செம ஹேப்பியாக அந்நிறுவனங்களின் நிறுவனர் மார்க் ஸூக்கெர்பெர்க் தொடங்கி உள்ளாராம்.