தென்கொரியா சிறுவன் ட்விட்டர்
உலகம்

’அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது’ - எப்போதும் தனிமையில் வாடும் 4 வயது குழந்தையின் கண்ணீர் வீடியோ!

4 வயது குழந்தை தனது பெற்றோரைப் பற்றிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது கண்ணீர்விட்டு கதறி அழும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

இன்றைய உலகில் பலரும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகின்றனர். அந்த வகையில் அதைத் தேடுவதற்கான உழைப்பையும் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், குடும்பம் ஒன்றில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குழந்தைகளை வீட்டில் உள்ள மூத்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கமாகி வருகிறது.

இன்னும் சில வீடுகளில் குழந்தைகளை, அதற்காகப் பாதுகாக்கப்படும் பள்ளிகளில் கொண்டுபோய் விட்டுவிடுவர். பின்பு மாலையில் திரும்பச் சென்று அழைத்துக்கொள்வர். இதனால், பல குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தன் பெற்றோரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் ஒரு குழந்தையின் கண்ணீர்ப் பேச்சுதான் இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருவதுடன், பல பெற்றோருக்கும் உதாரணமாக இருக்கிறது.

இதையும் படிக்க: இலவசத்துக்கு எதிராக பேசும் பாஜக, தேர்தலில் ஏன் இலவசங்களை அள்ளிவீசுகிறது? இரட்டை வேடம் போடுகிறதா?

தென்கொரியாவில் ஒளிபரப்பாகும் ’மை கோல்டன் கிட்ஸ்’ என்ற நிகழ்ச்சியில், சமீபத்தில் குழந்தை ஒன்று பங்கேற்றிருந்தது. 4 வயதான அக்குழந்தையின் பெயர் கியூம் ஜி-யூன். அந்த வீடியோவில், பெற்றோர் குறித்த கேள்விகளுக்கு அந்தக் குழந்தை கண்ணீர்விட்டு அழுததுதான் காணும் இதயங்களைக் கசிந்துருக வைத்துள்ளது.

அந்த வீடியோவில் குழந்தையிடம், ’உனக்கு அப்பா, அம்மா இருவரில் யாரைப் பிடிக்கும்’ எனக் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அந்த குழந்தை, ‘எனக்குத் தெரியவில்லை.. வீட்டில் நான் எப்போதும் தனியாகத்தான் இருப்பேன். என்னுடன் யாரும் விளையாடமாட்டார்கள். தனியாகவே எப்போதும் இருப்பேன்’ என்று சொல்வதுடன், அந்தப் பதிலுக்குப் பிறகு குழந்தையின் உள்ளுக்குள் இருக்கும் சோகமும் வீடியோவில் பளிச்சிடுகிறது.

அடுத்து அப்பா குறித்த கேள்விக்கு, ’தனது தந்தை கோபமாக இருக்கும்போது அச்சுறுத்தும் வகையில் இருப்பார்; தன்னிடம் அன்பாகப் பேச வேண்டும் என்று அவர் நினைக்கிறார்’ எனவும் அந்தக் குழந்தை தெரிவிக்கிறது. அடுத்து, தாய் குறித்த கேள்விக்கு, ’அவருக்கு என்ன பிடிக்கவில்லை என நினைக்கிறேன்’ எனக் கூறும்போது அந்தக் குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது. அதன் பிறகு சில நொடிகள் அமைதிகாக்கும் அந்தக் குழந்தை, பின்னர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்குகிறது. ’என் அம்மா நான் சொல்வதை எப்போதும் கேட்பதே இல்லை. எனக்கு அவருடன் விளையாட வேண்டும் என ஆசை. ஆனால், அவர் எப்போதும் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார்’ எனத் தெரிவிக்கிறது. இந்த வீடியாதான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே’-உலகிற்கு ஊக்கத்தை தந்த ஊன்றுகோல்; உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள்