உலகம்

இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்

இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்

webteam

பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை காக்க இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி பூண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முதல்முறையாக மும்பையில் என்பிஏ கூடைப்பந்து போட்டி நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், ஒரே மேடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார். அப்போது கடந்தவாரம் 69வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்காவின் சிறந்த நண்பனாக இந்தியா திகழ்கிறது என புகழ்ந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி மிகச்சிறந்த செயல்களை செய்து வருவதாகவும், அவரது ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் கூறினார். 

மோடியின் செயல்திட்டத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்த இந்தியர்கள் மத்திய தரத்திற்கு உயர்ந்துள்ளனர் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை சந்திக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இந்திய முதலீடுகள் அமெரிக்காவில் அதிகரிப்பதை வரவேற்பதாக பேசிய ட்ரம்ப், உலகப் புகழ் பெற்ற என்பிஏ கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் விரைவில் மும்பையில் நடத்தப்படும் எனக் கூறினார். 

இந்த விளையாட்டுப் போட்டியை தாம் காண வரவுள்ளதாகவும், அதில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அமெரிக்காவும், இந்தியாவும் உறுதி பூண்டிருப்பதாக கூறிய ட்ரம்ப், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் எல்லைப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும், அதை தாம் வெகுவாகவே உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.