உலகம்

`விண்வெளி குப்பைகளால் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து'- கடும் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்

`விண்வெளி குப்பைகளால் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து'- கடும் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்

நிவேதா ஜெகராஜா

விண்வெளி குப்பைகள் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் பயன்பாட்டுக் காலம் முடிந்த பின்னும் சுற்றி வருகின்றன. விண்வெளி குப்பைகள் என அழைக்கப்படும் இவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனித குலத்திற்கு தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பயன்தரும் விண்வெளி சேவைகளை இந்த குப்பைகள் சீர்குலைக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் செயற்கைக்கோள்களுடன் விண்வெளி குப்பைகள் மோதுவதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் சுமார் 30 ஆயிரம் விண்வெளி குப்பைகள் பூமிக்கு மேல் சுற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக வரும் 2026ஆம் ஆண்டு கிளியர் ஸ்பேஸ் - 1 என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது