இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில்தான் இந்திய மாணவர் ஒருவர், அமெரிக்க போதை ஆசாமியால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அடங்குவதற்குள், தற்போது அமெரிக்காவிலுள்ள இண்டியான மாகாணத்தில் மாயமான இந்திய மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, இண்டியானா மாகணத்திலுள்ள பர்ட்யு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை என அவருடைய தாய் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை கோரியிருந்தார். இதுகுறித்து அவர் பதிவிட்ட எக்ஸ் தளத்தில், “எனது மகன் நீல் ஆச்சார்யா கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் காணவில்லை. அவர் அமெரிக்காவில் உள்ள பர்ட்யு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக டாக்ஸி ஓட்டுநர் பர்ட்யு பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்டபோது பார்த்துள்ளார்” என அதில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “நாங்கள் பர்ட்யு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நீல் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நீல் குறித்து போலீசார் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, கடந்த 29ஆம் தேதி காலை அல்லிசன் சாலையில் மேற்கு லஃபயேட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இறந்தவர் நீல் ஆச்சார்யாதான் என அடையாளம் காணப்பட்டது. நீல் ஆச்சார்யா இறந்தது குறித்து போலீசார் தீவிரமாய் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களிலேயே நடைபெறும் இந்திய மாணவர்களின் மரணம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அமெரிக்காவில் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் என இரண்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் விடுதியில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, டிசம்பரில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற புள்ளிவிவர அறிக்கையை மத்திய அமைச்சர் வி. முரளிதரன் மாநிலங்களவையில் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், “கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை இயற்கையான காரணங்கள் மற்றும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர்.
கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 48 பேரும், ரஷியாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைபிரஸில் 14 பேரும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று மத்திய அமைச்சர் வி. முரளிதரன் குறிப்பிட்டிருந்தார்.