rahul gandhi pt web
உலகம்

”மிஸ் இந்தியா பட்டியலில் ஏன் OBC, பட்டியலின,பழங்குடியினத்தவர் இல்லை?”|ராகுல் கேள்விக்கு பாஜக பதில்!

மிஸ் இந்தியா பட்டியலில் பட்டியலின மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் (ஓபிசி) சேர்ந்த ஒரு பெண்கூட இடம்பெறவில்லை என ராகுல் சொன்ன கருத்துக்கு பாஜக பதில் அளித்துள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த 'சம்விதன் சம்மான் சம்மேளன்' மாநாட்டில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அடித்தளம். நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்துவோம். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த ஜாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்று முதலில் தரவுகள் சேகரிக்க வேண்டும். மிஸ் இந்தியா பட்டியலை நான் முழுமையாக ஆராய்ந்து பார்த்தேன்.

ஏன் அதில், பட்டியலின மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் (ஓபிசி) சேர்ந்த ஒரு பெண்கூட இடம்பெறவில்லை. அனைத்து மக்களுக்கும் சம அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை வைத்தால், நான் நாட்டை பிரிக்க முயற்சிப்பதாக பாஜவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மிஸ் இந்தியா , பாலிவுட், கார்ப்பரேட் நிறுவனங்கள், இன்ஸ்டிடியூசன் போன்ற அமைப்புகளில் 90 சதவீதத்தினரில் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். எனவே இதுகுறித்து தீர ஆராயப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறது” - எச்சரிக்கை விடுத்த டொனால்டு ட்ரம்ப்!

இந்தக் கருத்து விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதற்கு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”ராகுல், இப்போது மிஸ் இந்தியா போட்டிகள், திரைப்படங்கள், விளையாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கும் இடஒதுக்கீடு கோருகிறாரா? அவரின் இந்தக் கேள்வி சிறுபிள்ளைத்தனமானது.

இதற்கு ராகுல் மட்டுமல்ல, அவரை ஆதரிக்கும் நபர்களும் பொறுப்பு. இதுபோன்ற குழந்தைத்தனமான கேள்விகள் கேட்பது ராகுலுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்காக இருக்கலாம். உங்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களை கேலி செய்யாதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

முன்னதாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கா் பிரசாத்தும் ராகுலின் கருத்துக்கு கணடனம் தெரிவித்திருந்தார். அவர், ”மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிக்கிறோம் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொண்டு பேச வேண்டும். நீங்கள் இதர பிற்படுத்தப்பட்டவா்கள் குறித்துப் பேசுவது நல்ல விஷயமே. பேசுவதற்கு உரிமையும் உங்களுக்கு உள்ளது. ஆனால், இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசக் கூடாது.. இடஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியமான விவாதம்.

இது தொடா்பான விவாதத்தில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை சமூக, பொருளாதார நிலையில் கைதூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு முறை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒப்பிட்டுப் பேசியதை ஒருவாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும்கூட, உலக அழகிப் போட்டியில் ரீட்டா ஃபரியா, டயானா ஹைடன் போன்ற சிறுபான்மை மதத்தைச் சோ்ந்த இந்தியப் பெண்கள் வென்றுள்ளனா். உலக அழகிப் போட்டியில் சீக்கியப் பெண்கள் இறுதிச் சுற்று வரை சென்றுள்ளனா். ஆனால், இடஒதுக்கீடு விஷயத்தை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பாா்க்கிறீா்கள் என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி. இடஒதுக்கீடு முறையை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது” என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!