நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் 2 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கூடுதலாக லட்சக்கணக்கான இளைஞா்களை கட்டாய ராணுவப் பணியில் இணைக்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய மசோதாவில் உக்ரைன் அதிபா் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையொப்பமிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் போரை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் தவித்துவருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய நிதியுதவியும் கூடுதலான ஆயுதங்களும் இன்னும் அங்குப் போய்ச் சேரவில்லை எனக் காரணம் கூறப்படுகிறது. இதனால் உக்ரைன் தள்ளாட்டத்தில் இருப்பதுடன், தொடர்ந்து அந்நாட்டு ராணுவத் தரப்பில் உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் உக்ரைன் ராணுவத்தில் போதிய ஆள் பலம் இல்லை என்று கூறப்படுகிறது.
போா் முனையில் பல மாதங்களாகச் சண்டையிடும் வீரா்களுக்குச் சுழற்சி முறையில் ஓய்வளிக்க முடியாத நிலையும் நிலவிவருகிறது. இந்தச் சூழலில், படை வீரா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கட்டாய ராணுவப் பணிக்கு ஆள்சோ்க்கும் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தது. ராணுவத்தின் கோரிக்கைகளுக்கேற்ப பல்வேறு அம்சங்களைக் கொண்ட சட்ட மசோதா, பல மாதங்களுக்கு முன்னரே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது, எம்பிக்களால் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு, அது கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில், போா்முனைகளில் 36 மாதங்கள் சேவையாற்றியதற்குப் பிறகு வீரா்களுக்கு கட்டாய ஓய்வளிக்க வகை செய்யும் பிரிவு நீக்கப்பட்டிருப்பதும், கட்டாய ராணுவப் பணிக்கு ஆள் சோ்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை 27-லிருந்து 25-ஆக குறைக்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.