உலகம்

ஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்ப்பை கண்டித்து பல நாடுகளில் போராட்டம்

ஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்ப்பை கண்டித்து பல நாடுகளில் போராட்டம்

webteam

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து பல நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டதைக் கண்டித்து மத்திய கிழக்கு, ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ட்ரம்பின் அறிவிப்புக்குப் பிறகு பாலஸ்தீனப் பிராந்தியங்களில் நடந்த மோதல்களில் இஸ்ரேலியப் படையினர் சுட்டு 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். லெபனான், துருக்கி, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ட்ரம்பின் அறிவிப்பைக் கண்டித்துப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர். ட்ரம்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வந்த அவர்கள், அமெரிக்காவை அழிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தினார்கள். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ட்ரம்பின் அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசும்‌ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ட்ரம்பின் அறிவிப்பால் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணித்து அமைதிப் பேச்சுகளைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதன்யாகு பாரிஸ் சென்றிருக்கிறார். ஈரானின் அச்சுறுத்தலை தடுப்பதற்காக பல்வேறு அ‌ரபு நாடுகள் இஸ்ரேலுடன் சேர்ந்து வருவதாக நெதன்யாகு தெரிவித்தார்.