உலகம்

அமெரிக்காவில் டிக்டாக்கை நிர்வகிக்க முயற்சி... பேச்சுவார்த்தையில் மைக்ரோசாப்ட்

webteam

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் உரிமையைப் பெறுவதற்கான முயற்சியில் மைக்ரோசாப்ட் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் பைட்டேடான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் தொடர்ந்து பேசிவருகிறார். ஏற்கெனவே எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் டிக்டாக் செயலி உள்ளிட்ட பல சீனத் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் வணிகச் செயல்பாடுகளை மாற்றும் முயற்சியில் தற்போது சீன நிறுவனம் இறங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து அதனை நிர்வகிக்கும் அமெரிக்க  உரிமையைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக்டாக் செயலியை தடை செய்யவேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க அரசுத் தரபபில் எழுந்துவருகின்றன. அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி மூலம் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.