அமெரிக்கா | ஹாரிஸ் - நீதிபதி முகநூல்
உலகம்

அமெரிக்கா | ரத்தான ஓட்டுநர் உரிமம்தான் இருக்கு.. ஆனா கார் ஓட்டியபடியே Zoom-ல் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமெரிக்காவில், கார் ஒட்டிக்கொண்டே விசாரணைக்கு ஆஜரான நபரால் கடுப்பான நீதிபதி, அவரை இரண்டு நாட்கள் காவலில் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவின் மெக்சிகனை சேர்ந்தவர் ஹாரிஸ் (வயது 44). இவர் வழக்கொன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது. அதற்காக அவர், ஆன்லைன் மீட்டிங் வழியாக கார் ஓட்டியபடியே அவ்விசாரணையில் ஆஜராகியிருக்கிறார். அதைக்கண்ட நீதிபதி திகைத்துவிட்டார். காரணம், ஹாரிஸுக்கு ஏற்கெனவே ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது .

ஹாரிஸ் - நீதிபதி

இருப்பினும் ஹாரிஸிடம், ‘வாகனம் ஓட்டுகிறீர்களா?’ என்று நீதிபதி சிம்ப்சன் கேட்டிருக்கிறார்.

அதற்கு ஹாரிஸ் ’ஆம் நான் எனது மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆகவே, ஒரு நிமிடம் கொடுங்கள்; நான் எனது காரை பார்க்கிங் செய்து விடுகிறேன்’ என்றுள்ளார்

அதற்கு நீதிபதி: ”காரை நிறுத்திவிட்டூர்களா?” எனக் கேட்கவே

ஹாரிஸ், ’ஆம்..’ என்றுள்ளார்.

பிறகு ஹாரிஸின் வழக்கறிஞரிடம் நீதிபதி பேசுகையில், “அவருக்கு ஓட்டுநர் உரிமம் ஏற்கெனவெ ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லவா? ஆக அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. ஆனால் அவர்தான் காரை ஓட்டுவருகிறார், பாருங்கள்” என்று தெரிவித்தார்.

பின் மேலும் கோபமடைந்த நீதிபதி, “ஹாரிஸ் எதற்காக இவ்வாறு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் இன்று மாலை 6 மணிக்குள் சரணடைய வேண்டும். இல்லையெனில், அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்படும்” என்றுள்ளார்.

அதன்படி ஹாரிஸ் சரணடைந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.