ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் pt web
உலகம்

“ஜப்பானில் அடுத்த ஒருவாரத்திற்கு...” - நிலநடுக்கம், சுனாமி குறித்து வானிலை அதிகாரி எச்சரிக்கை

ஜப்பானில் அடுத்த ஒருவாரத்திற்கு குறிப்பாக இரண்டு மூன்று நாட்களுக்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Angeshwar G

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை அளவுகள்

இது குறித்து அந்நாட்டு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், “இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோவை 5 மீ உயரம் வரை சுனாமி தாக்கும். வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கும் .ஹோன்ஷீ அருகே 13 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் உயரமான இடங்களுக்கு சென்றுவிடுங்கள் என அந்நாட்டின் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ரிக்டர் அளவுகோலில் 6 க்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடகொரியா தென் கொரியா மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் தஜகஸ்தான் நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அணுமின் நிலையங்களில், கதிரியக்கம் கசியும் அபாயம் இல்லை என ஜப்பான் அணுசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வானிலை ஆய்வு மைய அதிகாரி இதுகுறித்து பேசுகையில், சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வலுவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு போன்றவற்றால் வீடுகள் இடிந்து விழுவதற்கான அபாயம் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்கு குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்றும் மக்களை எச்சரித்துள்ளார்.