உலகம்

WFH தெரியும்.. ஆனா WFS தெரியுமா? - உலகைச் சுற்றிப்பார்க்க மெட்டா ஊழியர் செய்த சுவாரஸ்யம்!

WFH தெரியும்.. ஆனா WFS தெரியுமா? - உலகைச் சுற்றிப்பார்க்க மெட்டா ஊழியர் செய்த சுவாரஸ்யம்!

JananiGovindhan

கொரோனா ஊரடங்கால் work from home என்ற வார்த்தை மக்கள் எல்லோருக்கும் தற்போது பழக்கப்பட்டு போயிருக்கிறது. வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை செய்வதையே உலகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் விரும்புவதால் வைரஸ் பரவல் தணிந்த பிறகும் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இதனை சாதகமாக வைத்து ஊழியர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான வேலைகளையும் அதனூடே செய்து வருகிறார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, சுயமாக வேறொரு வேலை செய்து வருமானம் ஈட்டுவது என பலவற்றை செய்கிறார்கள். இப்படி இருக்கையில், மெட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று செய்திருக்கும் செயல்தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

28 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின் வெல்ஸ் என்பவர் மெட்டாவின் ரியாலிட்டி லேப்ஸில் ரிமோட் பாணியில் அதாவது work from everywhere என்ற அடிப்படையில் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் உலகைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை ஆஸ்டின் நூதன முறையில் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார்.

அதாவது, 500 தனி அறைகள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட MN Narative ஒரு மெகா சொகுசு கப்பலில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டை 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு 12 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார் ஆஸ்டின். அதாவது 2 கோடியே 48 லட்சத்துக்கு லீசுக்கு எடுத்து தங்கி வருகிறார்.

இது குறித்து CNBC-யிடம் பேசியிருக்கும் ஆஸ்டின் வெல்ஸ், “வழக்கமான வேலைகளை பார்த்துக்கொண்டே புதுப்புது இடங்களுக்கு செல்வது மிகவும் வித்தியாசமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இதனால் என்னுடைய வேலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

எங்கு செல்ல வேண்டும் என விரும்புகிறோமோ அங்கு செல்லலாம். லக்கேஜை எடுத்துக்கொண்டு, ஃப்ளைட்டை பிடித்து பிறகு ஒரு ரூமை வாடகை எடுத்தால் போதும். இப்போது எனக்கான ஜிம், டென்ட்டிஸ்ட், மளிகை கடை, 24 மணிநேர மருத்துவமனை என எல்லாமும் என்னுடனேயே பயணிக்கிறது. இந்த உலகம் உட்பட” என குஷியாக தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்டின் வெல்ஸ் தங்கியிருக்கும் அந்த சொகுசு கப்பலில் 11 வகையான குடியிருப்பு இருக்கிறது. 1,970 சதுர அடி கொண்ட அந்த வீட்டில் 4 படுக்கையறைகள், ஒரு டைனிங் ஏரியா, 2 கழிவறை மற்றும் பால்கனி என அனைத்தும் இருக்கிறது.

இதில் 237 சதர அடி கொண்ட இடத்தில்தான் வெல்ஸ் குடியிருக்கிறார். அதில் மடக்கும் வகையிலான படுக்கை, ஷவர், பேன்ட்ரி என அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அந்த கப்பலில் குடியிருக்க ஆஸ்டின் விரும்புகிறாராம். மேலும் அந்த கப்பலில் ஆஸ்டின் வெல்ஸ்-க்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் குத்தகை தொகையிலேயே அடங்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி கப்பலிலிருந்தே வேலை பார்க்கும் ஆஸ்டின், Work form Ship-ஐ யும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்!