உலகம்

'பிரிவுக்கு நாட்களை எண்ணும் மெலனியா...' - ட்ரம்ப்புக்கு வரப்போகிறதா இன்னொரு இழப்பு?

'பிரிவுக்கு நாட்களை எண்ணும் மெலனியா...' - ட்ரம்ப்புக்கு வரப்போகிறதா இன்னொரு இழப்பு?

EllusamyKarthik

ஏற்கனவே தேர்தல் தோல்வியால் அதிபர் பதவியை இழந்த சோகத்தில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தற்போது மேலும் ஓர் இடியை அவரின் மனைவி தர இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபகாலமாக இருவரிடையேயும் மனக்கசப்பு இருந்து வருவதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தன. அதற்கேற்ப இருவரும் பொது நிகழ்வுகளில் நடந்துகொண்டது அவ்வப்போது தலைப்புச் செய்தியாகியது.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள ட்ரம்ப்பை, அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் மெலனியா விவாகரத்து செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தத் தகவலைக் கூறியது, வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப். அதற்கேற்றாற்போல் ட்ரம்ப் - மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என்றும் ஸ்டீபனி கூறியிருக்கிறார். இவர் மட்டும் இப்படிக் கூறவில்லை. 

வெள்ளை மாளிகையின் மற்றுமொரு உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமனும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 

"ட்ரம்ப் - மெலானியா தம்பதியின் 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருகிறது. அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதுதான் பாக்கி. வெளியேறினால் மெலனியா ட்ரம்ப் விவகாரத்து செய்து விடுவார். இதற்காகவே மெலனியா நாட்களை எண்ணி வருகிறார். 

தற்போது விவாகரத்து பெற்றால் பதவியில் இருக்கும் ட்ரம்ப்புக்கு அது பெரும் அவமானமாக அமையும். அதேநேரம் தன்னை பல வழிகளில் ட்ரம்ப் பழி வாங்க நேரிடும் என்றும் மெலனியா கருதுகிறார்" என்றும் நியூமன் தெரிவித்துள்ளார்.

ட்ரம்புக்கும் - மெலனியாவுக்கும் திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கெனவே இருவருக்குமிடையே 25 வயது வித்தியாசம் இருந்தது பேசு பொருளாகி இருந்தது. இந்த நிலையில்தான் இருவரது விவாகரத்து செய்தியும் கசிந்துள்ளன. 

ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதற்கு முன்பு இதுபோன்ற செய்திகள் வந்தபோது இருவருமே அதை மறுத்துள்ளனர். இப்படியான நிலையில், இது தொடர்பாக இருவரில் யாரேனும் ஒருவர் விளக்கம் அளித்தால் தான் இந்த விவகாரம் முற்றுப்பெறும்.