உலகம்

குருவின் சாமர்த்தியத்தால் துப்பாக்கிச்சூட்டில் காப்பாற்றப்பட்ட மாணவர்கள்

webteam

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தபோது ஆசிரியை ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது மாணவர்களை காப்பாற்றியுள்ளார். 

ஃப்ளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது அந்தப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவர் சூழலுக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு தனது வகுப்பு மாணவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.


ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அபாய காலங்களில் ஒலிக்கும் அலாரம் அடித்துள்ளது. இரண்டாவது முறையாக அலாரம் அடிக்கையில் சூழ்நிலையை புரிந்துக்கொண்டார். இந்தக் கட்டத்தில் பதற்றப்படாமல் தனது வகுப்பறையை பூட்டிவிட்டு மாணவர்களை அந்த அறையின் மூலையில்அமர சொல்லியுள்ளார். அது மட்டுமல்லாமல் வகுப்பறையின் ஜன்னல்களில் பேப்பரை கொண்டு அடைத்துவிட்டார். இதனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அறைக்குள் என்ன இருக்கிறது என தெரியாது.

மேலும் பாதுக்காப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த பின்னர் அந்த அறைக்கு சென்றுள்ளனர். அப்போது முன்னெச்சரிக்கை காரணமாக அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். வந்தது காவலர்களா அல்லது தூப்பாகிச் சூட்டில் ஈடுபட்டவர்களா என அவருக்கு தெரியாததால் இவ்வாறு செய்துள்ளார். அப்போது அவர்களிடம் முடிந்தால் கதவை உடையுங்கள் இல்லையென்றால் சாவியை கொண்டு வந்து திறங்கள். நான் கதவை திறக்க மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார் சாந்தி விஸ்வநாதன்.