உலகம்

மியான்மரில் 28 இந்துக்களின் சடலங்கள் மீட்பு

rajakannan

மியான்மர் நாட்டில் 28 இந்துக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர்களின் போராளிக் குழுக்கள் தான் கொன்றுள்ளதாக மியான்மர் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மியான்மர் நாட்டின் ரக்கைன் மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பவுத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம் போராளிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்தன. ராணுவ நடவடிக்கைக்கு பயந்து லட்சக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்களது தாயகமான வங்காளதேசத்துக்கு சென்றுவிட்டனர். இந்தியாவிற்குள்ளும் அகதிகளாக வந்துள்ளனர். 

இந்த நிலையில், ரோஹிங்யா இஸ்லாமியர்களின் போராளிக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் 28 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு குற்றம்சாட்டியுள்ளது. மீட்கப்பட்டுள்ள 28 சடலங்களில் 20 பேர் பெண்கள். மியான்மர் ராணுவத்தின் இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.