உலகம்

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாழைநாரில் முகக்கவசங்கள்.. பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய முயற்சி

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாழைநாரில் முகக்கவசங்கள்.. பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய முயற்சி

webteam

ஒருவகையில் கொரோனா புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இன்று முகக்கவசங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களே ஈடுபடத் தொடங்கிவிட்டன. வாழை நாரில் இருந்து முகக்கவசம் தயாரிக்கலாம் என மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன பிலிப்பைன்ஸ் நிறுவனங்கள்.

ஏற்கெனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வாழை நாரில் இருந்து தயாரிக்கப்படும் முகக்கவசம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சிகளுக்கு உலக நாடுகள் ஆதரவை அளித்துவருவதால் அவற்றுக்கு ஆதரவு கிடைக்கும். 

கொரோனா தொற்று நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. நெருக்கடிக் காலத்தைச் சமாளிக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்களால் பயன்படுத்தப்படும் முகக்கவசம், சுயபாதுகாப்புக் கவச உடைகள் போன்ற அத்தனையும் பிளாஸ்டிக் தயாரிப்புகள். எளிதில் மக்காதவை.  

பிலிப்பைன்ஸ் நாட்டில் அபாகா என்ற நார்ப்பொருள் ஒருவகையான வாழையில்  இருந்து தயாரிக்கப்படுகிறது. அதில் பலவகையான ஃபைபர் பொருட்களை உருவாக்கி வருகிறார்கள். அதனை தேநீர்ப் பைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பாலியஸ்டராக பயன்படுத்துகிறார்கள். அவை இரண்டு மாதங்களில் மக்கிவிடும் என்கிறார் பிலிப்பைன்ஸ் பைபர் நிறுவனத் தலைவர் கென்னடி கோஸ்டேல்ஸ். 

இந்த கொரோனா காலத்தில் சிந்தட்டிக் ஃபைபரால் செய்யப்படும் முகக்கவசங்களைப் பயனபடுத்துகிறோம். அவை மக்குவதற்கு பல நாட்கள் பிடிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். முக்கவசம் போன்று பயன்படுத்தி  பின்னர் தூக்கியெறியப்படும் பொருட்களின் விற்பனை 200 மடங்கிற்கும் மேலாக, 166 பில்லியன் டாலருக்கு உயரும் என ஐநா சபையின் வணிக அறிக்கை கணித்துள்ளது.   

பல நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக மக்கும் பொருட்களைத் தயாரிக்க தயங்கி வருகின்றன. ஏனெனில் உற்பத்திக்கான செலவு மற்றும் புதிய பொருட்கள் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுமா என்ற சந்தேகம் இருக்கிறது.  ஆனால், பிலிப்பைன்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் செய்யப்பட்ட ஆய்வில், மற்ற முகக்கவசங்களைவிட அபாக்கா நாரில் தயாரிக்கப்படுபவை நீரை எதிர்க்கும் தன்மையை அதிகம் பெற்றிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நார்ப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் இருந்துவருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் 85 சதவீத நார்ப்பொருள் தயாரிப்புகளை அந்நாடு வழங்கியுள்ளது. இந்த ஆண்டில், அதன் மொத்த உற்பத்தி 100 மில்லியன்  அமெரிக்க டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இன்றைய நிலையில், அபாக்கா நாரில் தயாரிக்கப்படும் பொருள்களில் பத்து சதவீதம் மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன என்கிறார் கோஸ்டேல்ஸ். மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் அபக்கா நார்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துவருவது மக்களுக்கு நல்லதுதான்.