mark with meat pt
உலகம்

பீர், மக்காடமியா கொட்டைகள் போட்டு வித்தியாசமான மாடு வளர்ப்பில் குதித்த மார்க்.. இதுதான் காரணமா?

உலகப்பணக்காரர்களில் ஒருவரும், மெட்டா நிறுவனருமான மார்க் சக்கர்பர்க், மாடு வளர்க்கும் தொழிலில் குதித்துள்ளார். அவர் மாடு வளர்க்கும் முறையும், இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

யுவபுருஷ்

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் சக்கர்பர்க், பல்வேறு தொழில்களில் கால்பதித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளார். மாடுகளுக்கு சோளம், புற்கள் மற்றும் தீவணத்தைப் போட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மார்க் போடும் தீவனம் சற்று புதிதானது. அது என்ன என்பதை அடுத்தடுத்த வரிகளில் பார்க்கலாம்.

ஹவாயில் இருக்கும் கவாய் எனும் தீவில் பாதியை தனக்கு சொந்தமாக்கியுள்ள மார்க், அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பண்ணை ஒன்றை அமைத்து வருகிறார். 1,400 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து அதை சுற்றி சுவர் எழுப்பி வருகிறார்.

இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மார்க் சக்கர்பர்க், மாட்டிறைச்சி சாப்பிடும் புகைப்படத்தையும் அதனுடன் சேர்த்துள்ளார். அவரது பதிவில், “உயர்தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்காக நான் பண்ணையில் வளர்க்கும் மாடுகளுக்கு மக்காடமியா கொட்டைகள் மற்றும் பீர் போன்றவை உணவாக கொடுக்கிறோம். இதன்மூலம், தரமான இறைச்சியை தயாரிக்கலாம். இந்த பீர் மற்றும் மக்காடமியா கொட்டைகளும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாடும் வருடத்திற்கு 2,200 மற்றும் 4,500 கிலோ மக்காடமியா தீவனத்தை உண்கின்றன. இப்போது எனது இந்த பயணத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன். இதை மென்மேலும் மேம்படுத்துவது ஜாலியாக இருக்கிறது. என்னுடைய மற்ற திட்டங்களைக் காட்டிலும் இந்த திட்டம் சுவையானது. இந்த மாடுகள் மற்றும் மரங்களை வளர்ப்பதற்கு எனக்கு மகளும் உதவுகிறாள்” என்று தனது மகளின் படத்தோடு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மார்க்.

இதற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒருதரப்பினர் நிலம் மற்றும் வளம் வீணடிக்கப்படுவதாகவும், மற்றொரு தரப்பினர் கனவு திட்டம் அருமை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.