மரியா பிரன்யாஸ் மொரேரா ஃபேஸ்புக்
உலகம்

117-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி... யார் இவர்? நீண்ட நாளுக்கான ரகசியமாக எதை சொல்கிறார்?

உலகிலேயே மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றிருக்கும் மூதாட்டி ஒருவர் தன் நீண்ட நாள் வாழ்க்கைக்கான ரகசியம் என்ன என்பதை தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உலகிலேயே மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றிக்கும் மூதாட்டி ஒருவர் தன் நீண்ட நாள் வாழ்க்கைக்கான ரகசியம் என்ன என்பதை தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டிற்கான உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தவர்தான் மரியா பிரன்யாஸ் மொரேரா. இவர் தனது 117-ஆவது வயதினை தற்போதுதான் கொண்டாடினார்.

இதற்கு முன்னர் 118 வயதான பிரெஞ்சு பெண் லூசில் ராண்டன் இந்த பதக்கத்தினை பெற்றிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் கேட்டலோனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் 23 ஆண்டுகளாக வசித்து வரும் இவர் தனது x வலைதளப் பக்கத்தில் தன் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார்.

”முதுமை என்பது ஒரு வகையான கலாசாரம். அப்போது உங்கள் கேட்கும் சக்தி குறைகிறது. ஆனால் இது நிகழும்போது நீங்கள் சத்தத்தை அல்ல, வாழ்க்கையை கேட்க ஆரம்பிக்கிறீர்கள். எனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்பது அதிர்ஷ்டம், மரபியல் மட்டுமல்ல.... குடும்பத்துடன் நல்லுறவு, இயற்கையுடன் இணைந்திருத்தல், கவலை இல்லாத வாழ்வு,தீய மனிதர்களிடம் இருந்து விலகி இருத்தல், உணர்ச்சிவசப்படாமல் இருப்பதே நீண்ட காலம் வாழ்வதற்கான வழி.” என்று தெரிவித்துள்ளார்.

மரியா பிரன்யாஸ் மொரேரா

1907-ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த இவர், 8 வயதிலேயே குடும்பத்துடன் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார்.1931-ஆம் ஆண்டு ஜோன் என்பவரை மணந்து கொண்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உண்டு.

1918-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல், ஸ்பானிஷ் உள்நாட்டு போர்,1976-ல் கணவரின் இறப்பு, மகன் டிராக்டர் விபத்தில் உயிரிழப்பு, மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது 113-ஆம் வயதில் கோவிட்டில் இருந்து மீட்பு என்று தன் வாழ்வில் முக்கிய பல துயரங்களை கண்டுள்ளார்.

மேலும், வயதுக்கு மிஞ்சிய சுறுசுறுப்புடன் காணப்படும் இவருக்கு இப்போது செவித்திறன், நடப்பதில் சில பாதிப்புகள் உள்ளது. இந்நிலையில் விஞ்ஞானிகள் நீண்ட நாள் ஆயுளை பெறுவது எப்படி என்று இவர்மூலம் ஆராய்ச்சிசெய்து வருகின்றனர்.