காசா மருத்துவமனை மீது தாக்குதல்  ஃபேஸ்புக்
உலகம்

"அய்யோ நெஞ்சே பதறுதே"- காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம்

PT WEB

காசாவில் மருத்துவமனை மீது நடந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாலஸ்தீனம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்" என்று அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனை மீது தாக்குதல்

மருத்துவமனையை 140 ஆண்டுகளாக ஆங்கிலேயே திருச்சபை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ மதத்தலைவர்களும் மருத்துவமனை தகர்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேற்குக் கரையில் வசிக்கும் மக்களும் ஒன்றுகூடி கண்டனத்தை பதிவு செய்தனர். மருத்துவமனை தகர்ப்பிற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோரும் எகிப்து, கத்தார், ஈரான் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட அழைப்பு விடுத்துள்ளன.

காசா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து அறிந்ததும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர்,

” காசாவின் அல் அரபு மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதனால் பல உயிர்கள் பறிபோனதற்கு மனவேதனை அடைகிறேன். உடனடியாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன். உண்மையில் என்ன நடந்தது ? என்பது குறித்து தகவல்களை சேகரிக்க அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

போரின்போது அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா துணை நிற்கும். காசா மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்களுக்காக இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.