மணிப்பூர் கலவரம், ஐரோப்பிய நாடாளுமன்றம் twitter
உலகம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ’மணிப்பூர் கலவரம்’ குறித்து தீர்மானமா?.. இந்திய அரசின் ரியாக்‌ஷன் இதுதான்!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Prakash J

மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே வெடித்து வரும் மோதலுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் முடிவெடுத்துள்ளது. ஜூலை 10 முதல் நடைபெற்று வரும் அந்தக் கூட்டத்தில் 6 நாடாளுமன்றக் குழுக்கள் மணிப்பூர் வன்முறை குறித்த தீர்மானங்களை நிறைவேற்றச் சொல்லி வலியுறுத்தி உள்ளன. இம்மசோதாவை இடதுசாரி, வலது, மைய-வலது, பழமைவாத மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட 6 நாடாளுமன்றக் குழுக்கள் அளித்துள்ளன.

’இந்திய மணிப்பூரின் நிலைமை’ என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற இன்று கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிகிறது. பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸின் தேசிய விழாவில் பங்கேற்க இருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம்

அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, “ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகியுள்ளோம். ஆனால் இது முற்றிலும் எங்களது உள்நாட்டு விவகாரம் என்பதை நாங்கள் அவர்களுக்கு தெளிவாகக் கூறியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆல்பர் & கெய்கர் ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தற்போதைய நிகழ்ச்சி நிரலில், மணிப்பூர் குறித்த தீர்மானங்கள் பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருப்பதாக மணிப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

’மணிப்பூரில் மோதலைத் தணிப்பதற்காக இந்திய அரசு இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. அமைதிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது’ என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

manipur violence

அந்த 6 நாடாளுமன்றக் குழுக்களும், மூன்றாம் நாட்டு அரசியல் நிலைமை, உள்ளூர் மோதல், அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை அனுமதிக்கும் விதிகளின்கீழ் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் கோரிக்கை வைத்ததாக் கூறப்படுகிறது.