உலகம்

ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணி வழங்கவில்லை எனக் கூறி உணவகத்திற்கு தீ வைத்த வாடிக்கையாளர்!

ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணி வழங்கவில்லை எனக் கூறி உணவகத்திற்கு தீ வைத்த வாடிக்கையாளர்!

ச. முத்துகிருஷ்ணன்

சிக்கன் பிரியாணி வழங்காத காரணத்தால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு உணவகத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் தீ வைத்த விவகாரத்தில் 10 நாட்களுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் போஸ்ட் எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நியூயார்க் நகரத்தின் குயின்ஸ் பரோவில் அமைந்துள்ள வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு இட்டடி கார்டன் அண்ட் கிரில் (Ittadi Garden and Grill) உணவகத்தை 49 வயது நிரம்பிய சோபெல் நோர்பு (Choephel Norbu) என்ற நபர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்வதற்காக இம்மாத துவக்கத்தில் அணுகியுள்ளார்.

அப்போது ஆர்டரை பெற்றுக்கொண்ட உணவக ஊழியர்கள் சிக்கன் பிரியாணியை நோர்புவிடம் கொடுத்தபோது அவர், “இது என்ன.?” என்று கேட்டுவிட்டு பிரியாணியை உணவகத்திற்குள்ளே தூக்கி வீசியதாக உணவக ஊழியர் ஜஹானா ரஹ்மான் தெரிவிக்கிறார். உணவகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு வெளியேறிய நோர்பு, பெட்ரோல் கேன் ஒன்றுடன் மறுநாள் காலை 6 மணியளவில் மீண்டும் அதே உணவகத்திற்கு வந்துள்ளார்.

உணவகத்தின் முன்புறத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் முயற்சியில் நோர்பு இறங்கிய போது, எதிர்பாராதவிதமாக அவர் மீதும் தீ பரவ துவங்கியது. இதனால் சம்பவ இடத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடினார் நோர்பு. உணவகத்திற்கு நோர்பு தீவைக்கும் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவானதால், நியூயார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து நோர்புவை தேடி வந்தனர்.

10 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நோர்பு, காவல்துறையிடம் “நான் மிகவும் குடிபோதையில் இருந்தேன். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். அவர்கள் எனக்கு சிக்கன் பிரியாணி கொடுக்கவில்லை. நான் பைத்தியமாக இருந்தேன், நான் அதை வெளியே எறிந்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

தீவிபத்தின் மூலம் உணவகத்திற்கு 1500 டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கைதான மறுதினமே நோர்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.