சிங்கப்பூரில் மனைவியிடமிருந்து சீக்கிரமாக விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்து அவரின் காரில் கஞ்சாவை வைத்த கணவர், இறுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் 37 வயதான டான் சியாங் லாங் என்ற நபருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே மனச்சங்கடங்கள் ஏற்பட , அக்டோபர் 2022-ஆம் ஆண்டு, இவரின் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால், விவாகரத்து கிடைக்கவில்லை. ஏனெனில், சிங்கப்பூர் சட்டத்தை பொறுத்தவரை திருமணமாகி குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆனவர்கள் மட்டுமே விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும் . ஆனால், இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு மட்டுமே ஆகியுள்ளது.
இந்தநிலையில்தான், டான் சியாங்கிற்கு உடனடியாக விவாகரத்து பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. எனவே, சீக்கிரமாக விவாகரத்து பெற ஏதேனும் வழி உண்டா என்று வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்துள்ளார். அப்போது, “மனைவி ஏதேனும் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டால், எளிதில் விவாகரத்தும் கிடைக்கும், மனைவிக்கு மரண தண்டனையும் கிடைக்கும்.” என்று ஆலோசனை கூறியுள்ளார் வழக்கறிஞர்.
மேலும், இவர்கள் சேர்ந்து வாழ்ந்த காலத்தில், வாங்கிக் குவித்த கடனை சமாளிக்க, மனைவி எந்தவித உதவியும் செய்யவில்லை என்ற ஆதங்கமும் டான் சியாங்கிற்கு இருந்துள்ளது. இதனால், மனைவியை குற்றப்பின்னணியில் சிக்கவைக்க முடிவு செய்த டான் சியாங், இதற்கென உள்ளூர் வியாபாரி ஒருவரை தொடர்பு கொண்டு கஞ்சாவை வாங்கியுள்ளார்.
மேலும், ஒரு தனியார் புலனாய்வாளரை பணியமர்த்தி, தன் மனைவி செல்லும் ஒவ்வொரு இடங்களையும் பின் தொடர செய்துள்ளார். இதன்படி, அக்டோபர் 17, 2023 அன்று டான் சியாங்கின் மனைவி அவரது காரை வடகிழக்கு சிங்கப்பூரில் நிறுத்தி வைத்திருக்கிறார் என்ற தகவலை இந்த தனியார் புலனாய்வாளர் தெரிவித்துள்ளார். இதன் பிறகு, இவ்விடத்திற்குச் சென்ற டான் சியாங்,, தன்னிடமிருந்த மற்றொரு கார் சாவியை உபயோகித்து, கையுறைகளை பயன்படுத்தி, கஞ்சா பாக்கெட்டுகளை காரில் பின்புற இருக்கையில் வைத்துள்ளார்.
ஆனால், காரின் அருகில் டான் சியாங் சுற்றிக்கொண்டு இருப்பதை தனது செல்போனில் இருந்த கேமரா ஆப் மூலம் நோட்டிஃபிகேஷனாக அறிந்த டான் சியாங் மனைவி உடனடியாக பார்க்கிங்கிற்கு வந்துள்ளார்.
தனது மனைவியை பார்த்த டான் சியாங் அங்கிருந்து தப்பித்துள்ளார். இதன் பிறகு, தன்னை டான் சியாங் பின் தொடர்ந்து வருகிறார் என்று சந்தேகித்த மனைவி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனால், டான் சியாங்கை அழைத்து விசாரித்த காவல்துறையினர், ’காரை சுற்றியே நடந்து கொண்டிருந்ததன் காரணம் என்ன?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த டான் சியாங், தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில்தான் காரில் அருகில் நின்று சோதனை செய்தேன் என்று தெரிவித்து அங்கிருந்து சென்றுள்ளார்.
மேலும், நடந்தவற்றை எல்லாம் தனது முன்னாள் காதலியிடம் டெலிகிராமில் மெசேஜ் செய்து வந்துள்ளார் டான் சியாங்.. அப்போது முன்னாள் காதலி, காரில் வைத்த கஞ்சாவை உடடியாக வெளியே எடுக்க டான் சியாங்கை அறிவுறுத்தியுள்ளர். காரணம்... காரில் இருக்கும் போதைப்பொருளை பார்த்தால் டான் சியாங்தான் அதை வைத்துள்ளார் என போலீசாரிடம் இவரின் மனைவி தெரிவித்துவிடுவார். இறுதியில் வழக்கு டானின் பக்கம் திரும்பி விடுமோ?... என்ற அச்சத்தில் அவ்வாறு கூறியுள்ளார்.
இதனால் சில நாட்களாக காரில் வைத்ததை எடுக்க நினைத்த டான் சியாங் அங்கு சென்றபோது அருகில் இருந்த காவல்துறையினர் இவரின் செயலை கவனித்துள்ளனர். பிறகு, அங்கிருந்திருந்து தப்பித்து சென்றுள்ளார் டான். அப்போது காரை சோதனை செய்த காவல்துறையினர், 11 காய்கறி பாக்கெட்டுகளில் 216.17 கி கஞ்சா இருப்பதை கண்டெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இதை வைத்தது யார்? என்று விசாரணை மேற்கொண்டதில், முதலில் டானின் மனைவியின் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர், செல்போன், இல்லம் என அனைத்தையும் சோதனை செய்துள்ளனர்.
ஆனால், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பின்னர், டான் சியாங்கை விசாரித்த போலீசார் இந்த குற்றத்தை செய்தவர் இவர்தான் என்பதைதெரிந்துகொண்டுள்ளனர். டான்சியாங்கும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட இவருக்கு, கடந்த 29 ஆம் தேதி 3 வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தன் முன்னாள் மனைவிக்கு பறித்த குழியில் தானே விழுந்த கணவர் குறித்த இந்த செய்தி, சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.