உலகம்

மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு

rajakannan

மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் உத்தரவிட்டுள்ளார்.

மாலத்தீவுகள் நாட்டின் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அதிபா் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நசீது, முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிரிட்டனில் சிகிச்சை பெற முகம்மது நசீது நாட்டை விட்டு வெளியேறினார். 

இதனிடையே, அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அது தொடர்பான வழக்கில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நசீத்தின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போது, கலவரம் வெடித்தது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அதிபர் முகம்மது நசீத்தை யாமீன் அரசு விடுதலை செய்ய மறுத்து வருகிறது.

இந்நிலையில், மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதை தடுக்க அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலை பிரகடனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகம் ஏற்படும் நபர்களை கைது செய்ய போலீசாருக்கு அதிபர் யாமீன் அதிகாரம் அளித்துள்ளார். மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி பயம் கொள்ளத் தேவையில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.