மோடி, முகம்மது முய்சு எக்ஸ் தளம்
உலகம்

மோடி பதவியேற்பு| மாலத்தீவு அதிபருக்கு அழைப்பு.. முதல்முறையாக இந்தியா வரும் முகம்மது முய்சு!

Prakash J

18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெற முடியாததை அடுத்து, அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக நாளை (ஜூன் 9) பதவியேற்க இருக்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதையடுத்து, இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக உலகத் தலைவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர், இதற்கான அழைப்பிதழை முகமது முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முய்சு ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாகவும், இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் முகமது முய்சு தெரிவித்துள்ளார். அவரது இந்திய பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: லோக் சபா தேர்தல்| பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு.. தவறை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்!

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி முகம்மது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின்போது, ​​அவர் அடிக்கடி இந்தியாவை விமர்சித்தார் மற்றும் இந்திய ராணுவ வீரர்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

முகம்மது முய்சு

அதன்பேரில் கடந்த மே மாதத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறி இருந்தனர். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) கட்சி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வெறும் 5 நாட்களில் ரூ.579 கோடி.. கிடுகிடுவென உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்துகள்!