உலகம்

"மாலத்தீவுக்கு வர வேண்டாம்" - இந்தியர்களுக்கு தடை விதித்த அரசு

"மாலத்தீவுக்கு வர வேண்டாம்" - இந்தியர்களுக்கு தடை விதித்த அரசு

jagadeesh

இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு அந்நாடு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பல நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே பல்வேறு சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் அழகிய சுற்றுலாத்தலமான மாலத்தீவும் இந்தியர்கள் சுற்றுலாவுக்கு வர தடை விதித்துள்ளது.

கடந்தாண்டு கொரோனா முதல் அலை வீசப்பட்டு இந்தியாவில் நாடு முழுவதும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்பு பொது முடக்கம் படிப்படியாக கைவிடப்பட்டது. கொரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல் பலரும் முடங்கிக் கிடந்த நிலையில், சுற்றுலா மனநிலையை தூண்டும் விதமாக பிரபலங்களின் தேர்வாக இருந்தது மாலத்தீவு. பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி தமிழ் திரையலகின் பல நட்சத்திரங்கள் மாலத்தீவு சென்று வந்தனர். அவர்கள் மாலத்தீவு புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதானால் மாலத்தீவு பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மாலத்தீவு வரும் இந்தியர்களுக்கு தங்களது தீவுகளில் தங்குவதற்கோ சுற்றிப் பார்ப்பதற்கோ அனுமதியில்லை. இத்தனை காலமாக எங்களுக்கு அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி. எங்களுடைய சுற்றுலாவை மேலும் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரமங்களுக்கு வருந்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.