உலகம்

புதிய ஆதாரம் கிடைத்தால் மாயமான விமானத்தை மீண்டும் தேடுவோம்: மலேசிய பிரதமர்

புதிய ஆதாரம் கிடைத்தால் மாயமான விமானத்தை மீண்டும் தேடுவோம்: மலேசிய பிரதமர்

webteam

புதிய ஆதாரங்கள் கிடைத்தால் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் முடுக்கிவிடப்படும் என அந்நாட்டு பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த 2014 ஆம் வருடம், 239 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவழியில் சென்று கொண்டிருந்த போயிங் 777 ரக இந்த விமானம் (MH370), திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில் எந்த பலனும் கிடைக்காததால் தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன. நான்கு ஆண்டுகள் ஆகியும் அந்த விமானம் எங்கு விழுந்தது என்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் விமானம் குறித்து புதிதாக ஆதாரங்கள் கிடைத்தால், தேடுதல் பணி மீண்டும் முடுக்கிவிடப்படும் என மலேசிய பிரதமர் ம‌காதீர் தெரிவித்துள்ளார். மாயமான மலேசிய விமானத்தின் இறக்கை உள்ளிட்ட மூன்று பாகங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.